×

99 ஆண்டுகள் 4 தலைமுறையை கண்ட மாஞ்சோலைக்கு ‘குட் பை’

அம்பை: குத்தகை காலம் முடிவதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். இதனால் 99 ஆண்டுகள் 4 தலைமுறையாக பணியாற்றிய தொழிலாளர்கள் கண்ணீர் மல்க செல்பி எடுத்து விடைபெற்றனர். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கிராமங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய இடங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர்.

இங்குள்ள தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் குத்தகை வருகிற 2028ம் ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. குத்தகை காலம் முடிவடையும் நிலையில் தேயிலை தோட்ட நிறுவனம் மாஞ்சோலை பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2028ம் ஆண்டு வரை கால அவகாசம் இருந்தாலும் தேயிலை தோட்ட நிர்வாகம் வருகிற ஜூலை மாத இறுதிக்குள் தொழிலாளர்களை மலைப்பகுதியில் இருந்து காலி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.

நேற்று 14ம் தேதிக்குள் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு தெரிவிக்க கெடு விதித்து நோட்டீஸ் அளித்திருந்தது. பின்னர் விருப்ப ஓய்வு விண்ணப்பம் அளித்தவர்களுக்கு உடனடியாக 25 சதவீதம் தொகையும், ஆக.7ம் தேதிக்குள் காலி செய்து செல்பவர்களுக்கு 75 சதவீதம் பணிக்கொடை வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து 90 சதவீத தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் (13ம்தேதி) முதல் இன்று 15ம்தேதி வரை 3 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்பட்டதோடு, இனி யாரும் தேயிலைத் தோட்டப் பணிக்கு வரவேண்டாம் என தோட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதனால் தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்துள்ளனர். தொடர்ந்து விருப்ப ஓய்வு தெரிவித்த தொழிலாளர்களுக்கு முதல் கட்டத்தொகையை பிபிடிசி நிர்வாகம் அளித்து வருகின்றது. 99 ஆண்டுகளாக 4 தலைமுறையாக தாங்கள் பாதுகாத்து வளர்த்த தேயிலை தோட்டப் பகுதிகளிலும், தேயிலை கம்பெனி அருகிலும் சென்று கண்ணீர் மல்க தொழிலாளர்கள் குரூப் போட்டோ மற்றும் செல்பி எடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதால் அவை வைரலாக பரவி வருகிறது.

The post 99 ஆண்டுகள் 4 தலைமுறையை கண்ட மாஞ்சோலைக்கு ‘குட் பை’ appeared first on Dinakaran.

Tags : Mancholai ,AMBAI ,Nellai district ,Manimutthar ,Western Ghats ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்னை...