×

ரூ.10,000 லஞ்சம் ; பெண் தாசில்தார் கைது

ஆரணி: ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் அமிர்தி பகுதியில் கேன்டீன் எடுத்து நடத்தி வருகிறார். ஊராட்சி பகுதிகளில் அரசு கட்டிட பணிகள் சம்பந்தமாக ஒப்பந்த டெண்டர் எடுத்து பணி செய்யும் ஒப்பந்ததாராக உள்ளார். இந்நிலையில் கண்ணமங்கலம் பகுதியிலேயே அரசு ஒப்பந்த டெண்டர் ரூ.20 லட்சத்தில் எடுத்துள்ளார்.

இதற்கு அரசு சொத்து மதிப்பு சான்று கோரி ஆரணி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த சான்று வழங்குவதற்காக துணை தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம், வருவாய் ஆய்வாளருக்கு ரூ.10 ஆயிரம், விஏஓவுக்கு ரூ.5 ஆயிரத்தை சீனிவாசன் லஞ்சமாக கொடுத்துள்ளார். இந்த லஞ்சத்தை பெற்றுக் கொண்டவர்கள் சான்றுக்கு பரிந்துரை செய்து, தாசில்தாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து சீனிவாசன் நேற்றுமுன்தினம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ் குறித்து கேட்டுள்ளார்.

அப்போது தாசில்தார் மஞ்சுளா ரூ.1 லட்சத்து ஆயிரம் வீதம், ரூ.20 லட்சத்திற்கு ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பின்னர், ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் சான்று வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறையில் சீனிவாசன் புகார் அளித்தார். அவர்கள் ரசாயன தடவிய ரூ.10 ஆயிரத்தை ேநற்று சீனிவாசனிடம் கொடுத்து அனுப்பினர்.

சீனிவாசனிடம் இருந்து இரவு காவலர் பாபு ரூ.10 ஆயிரம் பணத்தை வாங்கி தாசில்தார் மஞ்சுளா விடம் கொடுக்க முயன்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தாரையும் காவலாளியையும் கையும் களவுமாக கைது செய்தனர். இதையடுத்து பணம் வாங்கிய துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓவிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

The post ரூ.10,000 லஞ்சம் ; பெண் தாசில்தார் கைது appeared first on Dinakaran.

Tags : Arani ,Srinivasan ,Ramachandrapuram ,Kattukanallur ,Kannamangalam ,Tiruvannamalai district ,Amriti ,
× RELATED ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் ஆரணி...