×

தமிழகத்தை உலுக்கிய மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு : மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் உள்பட 9 பேரும் விடுதலை செய்து தீர்ப்பு!!

சென்னை: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நரம்பியல் மருத்துவர் சுப்பையா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மருத்துவர் சுப்பையா பட்டப்பகலில் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சொத்து பிரச்சனையில் மருத்துவர் சுப்பையா கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி சென்னையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்கள் வழக்கறிஞர் பாசில், இன்ஜினியர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், இன்ஜினியர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் மரண தண்டனை மற்றும் இரட்டை ஆயுள்தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலும், தண்டனையை உறுதி செய்யக் கோரிவிசாரணை நீதிமன்றம் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. குற்றவாளிகள் தரப்பில், விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களது வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை என்றும் கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் முறையாக நிரூபிக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இன்றைக்கு மேற்கண்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

The post தமிழகத்தை உலுக்கிய மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு : மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் உள்பட 9 பேரும் விடுதலை செய்து தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Doctor ,Supbaia ,Tamil Nadu ,Chennai ,Court ,Supaiah ,Supbaia Bhatapagal ,Raja Annamamalaipuram, Chennai ,Tupaiya ,
× RELATED 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்கள்...