×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்; நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டி!

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஜூலை 10ல் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடவுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக எம்எல்ஏ புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதன் காரணமாக 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீது ஜூன் 24-ம் தேதி மனுக்கள் பரிசீலனை; மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம் தேதி கடைசிநாள், ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; வருகின்ற சூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்; நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டி! appeared first on Dinakaran.

Tags : Vikrawandi Constituency Midterm Election ,Abinaya ,Tamil Party ,Chennai ,Akkatsi ,Seeman ,Dr. ,Vikriwandi midterm ,Tamil Nam Party ,Vikrawandi midterm elections ,Vikrawandi ,party ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 12.94% வாக்குப்பதிவு