×

நெல்லியாளம் நகராட்சியில் தூய்மை பணியாளரை தாக்கியதாக சக பணியாளர்கள் போராட்டம்

*தலைவர் சிவகாமி சமரசம்

பந்தலூர் : நெல்லியாளம் நகராட்சி துப்புரவு பணியாளரை தாக்கியதாக சக தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து துப்புரவு பணியாளர்களுடன் தலைவர் சிவகாமி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி ஏலமன்னா பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு நேற்று முன்தினம் நகராட்சி தலைவர் சிவகாமி மற்றும் கவுன்சிலர் முரளிதரன் ஆகியோர் குப்பை கிடங்கின் பணிகளை ஆய்வு செய்வதற்கு சென்றனர்.

அப்போது நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டும் பணியில் ஈடுபட்டு வந்த துப்புரவு பணியாளர் செந்தில்குமார் என்பவருக்கும் நகராட்சி தலைவருடன் சென்றிருந்த அவரது வாகன ஓட்டுநர் சைபுல்லா என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் செந்தில்குமாரை சைபுல்லா நெஞ்சில் கை வைத்து தள்ளியதாகவும் கூறப்படுகிறது. இதில் நெஞ்சில் வலி ஏற்பட்டதாக கூறி, செந்தில்குமார் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என சக துப்புரவு பணியாளர்கள் நேற்று நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கமேஷ்வரன் மற்றும் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி தலைவர் சிவகாமி, துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் அட்சயா அசோசியேட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரமோகன் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, குப்பை கிடங்கிற்கு ஆய்வுக்கு செல்லும் தலைவர் மற்றும் கவுன்சிலருக்கு உரிய மரியாதையை துப்புரவு பணியாளர்கள் கொடுக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தேவாலா போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கவுன்சிலர் முரளிதரன் கூறுகையில், ‘‘தினந்தோறும் நகராட்சி பகுதியில் சேகரமாகும் 1 டன் குப்பைக்கு நகராட்சி நிர்வாகம் ரூபாய் 5,500 வழங்கப்படும் நிலையில் நாள் ஒன்றுக்கு 3 டன் குப்பைகளே சேகரமாகிறது. ஆனால் தினமும் 7 டன் குப்பை சேகரமாவதாக ஒப்பந்ததாரர் பணம் பெறுகிறார். அதனால் அரசு மற்றும் நகராட்சி பணம் விரயமாகிறது.

இதுகுறித்து உண்மை நிலையை தெரிவதற்கு நகராட்சி தலைவருடன் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை குப்பை கிடங்கில் வைத்து எடை போடுவதை ஆய்வு செய்வதற்கு சென்றோம்.
ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக துப்புரவு பணியில் உள்ளவர்கள் எங்களை ஆய்வு செய்ய விடாமல் வாக்குவாதம் செய்கின்றனர்’’ என குற்றச்சாட்டு தெரிவித்தார்.

The post நெல்லியாளம் நகராட்சியில் தூய்மை பணியாளரை தாக்கியதாக சக பணியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nellialam ,Sivakami Samarasam Bandalur ,President ,Sivakami ,
× RELATED பந்தலூர் இந்திரா நகரில் சேறும் சகதியுமான நடைபாதையால் பாதிப்பு