×

மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘போதை பொருள் இல்லாத தமிழ்நாடு’ விழிப்புணர்வு பிரச்சார முகாம்

*மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை

மஞ்சூர் : மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது.தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் பான்பராக், பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.
குறிப்பாக போதைப் பொருட்களை ஒழிப்பது என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்லா. சமூக ஒழுங்கு பிரச்சனையாகும். போதைப்பொருள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருந்தாலும் அது போதாது. போதைப்பொருள் புழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் கஞ்சா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க பள்ளி, கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்களின் அருகே போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்க போலீசார் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றை ஒழிப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் உத்தரவின் பேரில் மஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘போதை இல்லாத தமிழ்நாடு’ விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் பவுல்ராஜ் வரவேற்றார். மஞ்சூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி போதை பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலான குற்ற சம்பவங்களும் போதை பழக்கத்தின் மூலமே ஏற்படுகிறது.

திருட்டு, கொள்ளை, அடிதடி, கொலை, பாலியல் தொந்தரவுகளில் மட்டுமின்றி தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். போதை பொருட்களால் அதை பயன்படுத்துவோருக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சமுதாயம், கலாச்சர சீரழிவுகளுக்கும் போதை பழக்கம் காரணமாகிறது. போதைப்பொருட்கள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்க வேண்டும் முன்வர வேண்டும்‘‘ என்றார்.

இதைத்தொடர்ந்து எஸ்.ஐ. சவுந்திரராஜன் பேசும்போது, ‘‘18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் எக்காரணம் கொண்டும் இரு சக்கரம் உள்ளிட்ட எந்தவிதமான வாகனங்களையும் இயக்கக்கூடாது. முறையாக பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனங்களை இயக்கினால் சம்பந்தப்பட்டவரின் பெற்றோர்கள் மீது அபராதம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாத நிலை ஏற்படும்’’ என தெரிவித்தார்.

மேலும் போக்சோ சட்டம் குறித்து மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சசிகுமார் நன்றி கூறினார்.

The post மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘போதை பொருள் இல்லாத தமிழ்நாடு’ விழிப்புணர்வு பிரச்சார முகாம் appeared first on Dinakaran.

Tags : Drug Free Tamilnadu ,Manjoor Government High School ,Manjoor ,Drug-free ,Tamil ,Nadu ,Tamil Nadu ,Government High School ,Dinakaran ,
× RELATED நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல்...