×

ஊட்டி அருகே பாலகொலா ஊராட்சியில் மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

*கலெக்டர் வழங்கினார்

ஊட்டி : ஊட்டி அருகே பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட பி.மணியட்டி கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருணா வழங்கினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட பி.மணியட்டி சமுதாய கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாம் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். இம்மனுநீதி நாள் முகாமில் ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 95 மனுக்கள் பெறப்பட்டதில், 71 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெண் குழந்தைகள் மற்றும் சிறார்களின் எதிர்காலம் மற்றும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதன் புகார்களை 1098 என்ற இலவச எண்ணிலும், பெண்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் மற்றும் புகார்கள் இருந்தால் 181 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மகளிர் சுய உதவிக்குழுக்களை பொறுத்தவரை அவர்களுக்கு கடனுதவிகள் மட்டுமல்லாமல், அவர்களின் தனித்திறமைகளை ஊக்குவித்து, அதன் மூலம் உருவாக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்தவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாலகொலா ஊராட்சியில் சுமார் 32 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளது. இந்த குழுக்கள் மூலம் உருவாக்கப்படும் பொருட்கள் வெளிசந்தைகளில் விற்பனை செய்ய மகளிர் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2023-24ம் கல்வியாண்டில் மேல்நிலை தேர்ச்சி விகிதத்தில் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி 90 சதவீதமாகவும், அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி 94 சதவீதமாகவும் உள்ளது. உயர்நிலை தேர்ச்சி விகிதத்தில் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி 90 சதவீதமாகவும், அரசு பள்ளிகளில் 91 சதவீதமாகவும் உள்ளது.

இது அரசு பள்ளியின் கல்வித்தரம் உயர்ந்துள்ளதையே காட்டுகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும். பாலகொலா ஊராட்சியில் ஏறக்குறைய ரூ.16.75 கோடி மதிப்பீட்டில் 617 வளர்ச்சிப்பணிகள் எடுக்கப்பட்டு, அதில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளது. சில பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டில் மட்டும் சுமார் ரூ.85 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறவுள்ளது. இதுபோல், முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களை அறிந்து கொண்டு, அதனை முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் விவசாய கடன் ஆணை, ஒரு பயனாளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் தொழிற்கடனுக்கான ஆணை, மகளிர் திட்டம் சார்பில் 4 பேருக்கு ரூ.28 லட்சம் வங்கி கடனுக்கான ஆணை, தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள வீரியரக கேரட் விதைகள், 3 பேருக்கு ரூ.45 ஆயிரத்து 159 மதிப்பில் தெளிப்பு நீர் பாசன கருவிகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் மருந்து பெட்டகங்கள், 5 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கினார்.

மேலும் 5 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் பயன்பெறும் வகையிலா முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், வருவாய்த்துறை சார்பில் 56 பேருக்கு ரூ.39.80 லட்சம் மதிப்பில் இ-பட்டாக்கள், 6 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.27 லட்சம் மதிப்பில் உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகள் உட்பட 107 பேருக்கு ரூ.1.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருணா வழங்கினார். முன்னதாக, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

முகாமில், கூடுதல் ஆட்சியர் கௌசிக், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தாமரைமனாளன், ஊட்டி ஆர்டிஓ மகராஜ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காசிநாதன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சத்தியநாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) கல்பனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாதன் (எ) மாயன், பாலகொலா ஊராட்சித்தலைவர் கலையரசி, துணைத்தலைவர் மஞ்சை மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டி அருகே பாலகொலா ஊராட்சியில் மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Human Rights Day ,Balakola panchayat ,Ooty ,Collector ,Aruna ,justice day ,B. Maniyati ,Nilgiri district ,human justice day camp ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...