×

வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம்

நெல்லை : வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை என்னும் தாமிரபரணி பாய்ந்து வளம்கொழிக்கும் நெல்லை நகருக்கு திக்கெட்டும் புகழ் சேர்க்கும் வகையில் சுவாமி நெல்லையப்பர்- அன்னை காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. தென் தமிழ்நாட்டில் அகஸ்தியருக்கு திருமண கோலம் காட்டி அருளிய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த உற்சவம், ஆனிப்பெருந்திருவிழா, ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா, ஆவணி மூலத்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம், ஐப்பசி திருக்கல்யாண வைபவம், கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா, பங்குனி உத்திர திருவிழா, தைப்பூச திருவிழா, மாசி அப்பர் தெப்ப உற்சவம், பங்குனி உத்திர திருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவற்றில் தனித்துவமிக்க ஆனிப்பெருந்திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்தாண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (13ம் தேதி) துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கொடிப் பட்டமானது காந்திமதி யானை மீது வைத்து வெளிபிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரங்களில் உள்பிரகாரம் வலம் வரும் வைபவம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக சன்னதியில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் ஆனிப்பெருந்திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.

இதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு மாவுபொடி, மஞ்சள் பொடி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களாலும், தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களாலும், பழவகைகளாலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பஞ்ச தீபாராதனை, சோடஷ தீபாராதனை நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நெல்லை மண்டல இணை ஆணையாளர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையாளர் கவிதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, ஆய்வாளர் தனலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, அறங்காவலர்கள் உஷாராமன், செல்வராஜ், சொனா வெங்கடாசலம், கீதாபழனி மற்றும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி- அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. அத்துடன் இரவில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியதும் வீதியுலா நடக்கிறது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் இம்மாதம் ஜூன் 21ம்தேதி வெள்ளிக்கிழமை காலை வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக நடக்கிறது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம் பிடித்து நிலையம் சேர்க்கின்றனர்.

இதை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து நெல்லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு தமிழக திருக்கோயில்களில் இதுவரை காணாத வகையில் பெங்களூரு, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜெர்பரா, கார்மோஸ், டாலியா, பூனாகி, சைபுரோஸ், ரோஜா, முல்லை, கனகாம்பரம், சம்மங்கி, மல்லிகை, கேந்தி, செவ்வந்தி, அரளி, பச்சை உள்ளிட்ட பல்வேறு மலர்களால் மாலைகள் கட்டப்பட்டு கோயில் முகப்பு மண்டபம் முதல் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும் தங்க கொடிமரம் மண்டபம் வரை பல்வேறு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

The post வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Nellaiyapar Temple ,Nellai ,Swami ,Nellaiappar ,Annai Gandhimati Ambal temple ,Thamirabarani ,Thanpurunai ,South Tamil Nadu ,Prasithi ,Agasthya ,Aniperundruvizha ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்