×

சிபிஐ விசாரணைக்கு தயாரில்லை எனில் நீட் தேர்வு முறைகேடு பற்றி உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவலர் மல்லிகார்ஜூன கார்கே தன் டிவிட்டர் பதிவில், “நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் தரப்பட்டது மட்டுமே பிரச்னை இல்லை. வினாத்தாள் கசிந்தது உள்பட பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசின் நடவடிக்கையால் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தேர்வு இடையே “பணம் கொடுங்கள், வினாத்தாள் வாங்குங்கள்” என்ற விளையாட்டு நடக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் கேள்வித்தாள் கசிவு மற்றும் மோசடிகள் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு பாழாக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் மோடி அரசின் அணுகுமுறை தவறானது, பொறுப்பற்றது. நீட் முறைகேடு பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அதற்கு மோடி அரசு தயாராக இல்லையென்றால் உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். மேலும் “இந்த விவாகரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் எதிரொலிக்கும்” எனவும் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய், “தேசிய தேர்வு முகமை தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்துள்ளன. எனவே தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடத்தும் எந்தவொரு விசாரணையும் நியாயமாக, நேர்மையாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

* நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரமில்லை
இரண்டாவது முறையாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சராகியுள்ள தர்மேந்திர பிரதான் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ‘‘நீட் இளங்கலை தேர்வுக்கான வினாத்தாள் கசிவு குறித்து எந்த ஆதாரமும் இல்லை. தேசிய தேர்வு முகமை மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. அது மிகவும் நம்பகமான அமைப்பாகும். அது ஆண்டுக்கு 50லட்சக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு தேர்வு நடத்துகிறது.

தேர்வு எழுதியவர்கள் மறுதேர்வை எழுத விரும்வில்லை என்றால் அவர்களின் முந்தைய மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்படும். தேசிய தேர்வு முகமையின் விருப்பத்துக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் வரையறையை அடிப்படையாக கொண்டது. அந்த கணக்கீடுகளுக்கு ஒரு அடிப்படை உள்ளது. இதில் முரண்பாடுகள் இருந்தால் அவை சரி செய்யப்படும். மேலும் எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்றார்.

The post சிபிஐ விசாரணைக்கு தயாரில்லை எனில் நீட் தேர்வு முறைகேடு பற்றி உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,CONGRESS ,MALLIKARJUNA KARKE ,TWITTER ,Modi government ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு:...