×

பூந்தமல்லி நகராட்சி, திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ₹98 கோடி மதிப்புள்ள 19 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: நகராட்சி, அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

பூந்தமல்லி, ஜூன் 14: பூந்தமல்லி நகராட்சி மற்றும் திருப்போரூர் காந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ₹98 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை நகராட்சி, அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
பூந்தமல்லி நகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து லாரி ஷெட் அமைத்திருந்தனர். இந்நிலையில், ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும், என்று 5வது வார்டு உறுப்பினர் வடிவேலு நகரமன்ற கூட்டம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில், நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், நகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் லதா தலைமையில், நகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்திற்கு சென்றனர். அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த லாரி ஷெட்டை அகற்றினர். மேலும் நகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையை வைத்தனர். மேலும், மீட்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் வேலி அமைத்தனர். மீட்கப்பட்ட 50 சென்ட் நிலத்தின் மதிப்பு ₹18 கோடி எனவும், இந்த இடம் நகராட்சி திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும், என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலம் ஏதேனும் ஆக்கிரமிப்பில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலங்களை மீட்டு கோயில் வசம் சுவாதீனப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆண்டு குத்தகை செலுத்தும் நிலங்களை தவிர்த்து கோயில் கணக்கில் வராத நிலங்களை மீட்டெடுத்து சுவாதீனப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனடிப்படையில் பல்வேறு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 5 ஏக்கர் 1 சென்ட் நிலம் தனி நபர் ஆக்கிரமிப்பிலும், 13 ஏக்கர் 44 சென்ட் நிலம் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பாரதிய வித்யா பவன் ஆக்கிரமிப்பிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல்முருகன் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி நிலங்களை மீட்டெடுத்தனர். மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ₹80 கோடிக்கு மேல் இருக்கும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.எஸ். ஆக்கிரமித்த நிலம்
சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் பிரபல ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பான பாரதிய வித்யா பவன் நிறுவனம் திருப்போரூரில் ஆதிசங்கரர் பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்குவதற்காக 64 ஏக்கர் நிலங்களை கிரையம் வாங்கி இருப்பதும், இந்த நிலங்களுக்கு செல்ல வழி இல்லாததால் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 13 ஏக்கர் 44 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து மதில்சுவர் அமைத்து இருப்பதும் அந்த நிலங்கள்தான் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த வாரத்தில் மேலும் 20 ஏக்கர் நிலங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்ற உள்ளதாகவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post பூந்தமல்லி நகராட்சி, திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ₹98 கோடி மதிப்புள்ள 19 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: நகராட்சி, அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Poontamalli Municipality ,Thiruporur Kandasamy Temple ,Municipality, ,Charities Department ,Poontamalli ,Municipality and Endowment Department ,Tiruporur ,Kanthasamy ,Temple ,Ambal Nagar ,Tirupporur ,Kandasamy temple ,charity department ,Dinakaran ,
× RELATED திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில்...