×

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை மறுநாள் பிரமாண்ட பாராட்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடு

சென்னை: மக்களவை தேர்தலில் இந்தியாவே வியந்து பார்க்கும் வெற்றிக்கு வித்திட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட பாராட்டு உள்பட திமுக முப்பெரும் விழா கோவையில் நாளை மறுநாள் நடக்கிறது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் மொத்தமாக சுருட்டி அள்ளியிருக்கிறது திமுக கூட்டணி. எந்தவொரு வெற்றிக்கும் அடித்தளம் முக்கியம் என்றால், அதற்கேற்ப, 2019லேயே விதை போட்டது திமுக தலைமை.

குறிப்பாக திமுகவின் கூட்டணியில் எந்த பிளவு இல்லாமல் அன்று முதலே நீடித்ததை சொல்லலாம். பாசிச பாஜகவுக்கு எதிரான ஒற்றை சிந்தனையில் கூடியிருக்கும் இந்த கூட்டணியில் எந்த பிளவும் இல்லாமல் பார்த்து கொண்டது; கூட்டணி கட்சிகளுக்கு சரியான தொகுதிகளை ஒதுக்கியது என தேர்தல் வெற்றிக்கு முதல் அடித்தளத்தை அமைத்தது திமுக தலைமை. அதன் தொடர்ச்சியாக, திமுகவில் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் என்று சொல்லலாம். குறிப்பாக சீனியர் மற்றும் புதுமுக வேட்பாளர்கள் என்ற கலவையுடன் வேட்பாளர் தேர்வு இருந்தது.

பிரசாரத்தை பொறுத்தவரை, மிக குறுகிய நாட்களே இருந்த நிலையில்,. இரண்டு வேட்பாளர்களுக்கு ஒரு அறிமுக கூட்டம் என்ற அடிப்படையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் 20 தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தினர். இதில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு செயல்படுத்திய திட்டங்கள், புதிய வாக்குறுதிகள், ஒவ்வொரு கூட்டத்திலும் சம்பந்தப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் என முதலமைச்சரின் பேச்சு அமைந்தது. இந்த கூட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைச்சர் உதயநிதி மற்றும் எம்பி கனிமொழி ஆகியோரது பிரசாரம் அமைந்தது. இதற்கும் அடித்தளம் இட்டவர் மு.க.ஸ்டாலினே. திமுக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணியில் காட்டும் அக்கறை, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியிலும் இருக்க வேண்டும் என்ற வகையில் அவரது கட்டளை அமைந்து இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்ததுடன், எந்த தொகுதியிலாவது தோல்வியை சந்திக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர் பதவியை இழக்க நேரிடும் எனவும் எச்சரித்து இருந்தார். இதன் காரணமாக, 40 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுவது போல, திமுகவினர் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகினர். மிக முக்கியமாக களத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

தேர்தலில் முடிவில் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் பலர் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பதே இதற்கு சாட்சி. இப்படி கூட்டணியை தக்க வைத்தது, பிரசார வியூகத்தை சரியாக அமைத்தது, நிர்வாகிகளுக்கான பொறுப்பை உணரும் வகையில் எச்சரிக்கையுடன் செயல்பட வைத்தது உள்ளிட்ட அம்சங்கள் திமுக கூட்டணி இம்முறை, 40க்கு 40 வெற்றியை பெற சாத்தியமாக்கியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்று, நூற்றாண்டின் நாயகர் கலைஞரின் காலடியில் காணிக்கை ஆக்குவோம்” என்று மு.க.ஸ்டாலின் உறுதியேற்றார்.

அந்த உறுதியைச் செயல்படுத்திக் காட்டி விட்டார். இந்தியாவே வியந்து பார்க்கும் இந்த வெற்றிக்கு வித்திட்ட திமுக தலைவர்- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா- கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழாவாக கோவை கொடிசியா மைதானத்தில் வரும் 15ம் தேதி(நாளை மறுநாள்) நடக்கிறது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும், திமுக அமைச்சர்கள், வெற்றி பெற்ற எம்.பிக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இந்த முப்பெரும் விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள், கொடிசியா மைதானத்தில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் இந்த முப்பெரும் விழாவை நடத்த திமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை மறுநாள் பிரமாண்ட பாராட்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Principal ,Mu. K. ,Stalin ,Goa ,Chennai ,India ,Mu ,. K. ,Dimuka Mupperum ,Lok Sabha elections ,Tamil Nadu ,M.U. K. ,
× RELATED இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித்...