×

பக்ரீத் விடுமுறை எதிரொலி.! வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க 17ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: போக்குவரத்துத் துறை உத்தரவு

சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திங்கட்கிழமை வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்துத் துறை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அவகாசம் வழங்கியது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. அரசு பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மட்டுமல்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகளும் மாநிலத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக திகழ்ந்து வருகிறது.

குறிப்பாக, தலைநகர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி என மாநிலத்தின் முக்கிய மாநகரங்களுக்கு பயணிகளின் வசதிக்கேற்ப, சொகுசான போக்குவரத்து சேவைகளையும் வழங்கி வருகின்றன. அதேநேரம், வார இறுதி விடுமுறைகள், விழா காலங்கள், பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகப்படியான கட்டணம் வசூலித்து சட்ட விதிமீறல்களிலும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வெளி மாநில பதிவெண்களுடன் அதிக அளவிலான ஆம்னி பேருந்துகள் தமிழகத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இப்படி வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வந்தது. இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினர் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியதால், அவ்வப்போது அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது.

ஆனால், வரும் 14ம் தேதி முதல் தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் மாநிலத்தில் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை அறிவித்தது. இதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை வரும் 17ம் தேதி வரை இயக்க அவகாசம் அளித்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்குவதற்கான கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையொட்டி கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

The post பக்ரீத் விடுமுறை எதிரொலி.! வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க 17ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: போக்குவரத்துத் துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bakrit ,Omni ,Department of Transport ,Chennai ,Commissioner ,Transport Department ,Dinakaran ,
× RELATED பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில்...