×

மேட்டுப்பாளையத்தில் இருந்து நேரடியாக ஊட்டிக்கு மாற்றுப்பாதை!!

ஊட்டி: உதகமண்டலம் செல்வதற்கான மாற்றுவழி சாலை பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஊட்டியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீசன் நடக்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்களில் மலைப்பகுதிக்கு சுமார் 10 முதல் 15 ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி பயண நேரமும் வீணாகிறது என்று சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை புதிய திட்டத்தை வகுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூருக்கு செல்லாமல் நேரடியாக ஊட்டிக்கு செல்லும் வகையில் 40 கோடி ரூபாய் மதிப்பில் புறவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 20.5 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. மாற்று பாதையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மலை பாதையில் வரும் வாகனங்கள் காட்டேரி, சேலாஸ் ,கெந்தலா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்தி பேட்டை வழியாக ஊட்டிக்கு செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால் சமவெளியில் இருந்து பல வாகனங்கள் குன்னூர் செல்லாமல் நேரடியாக ஊட்டிக்கு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வாகன நெரிசல் தவிர்க்கப்படும். புதிய மாற்று சாலை பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

The post மேட்டுப்பாளையத்தில் இருந்து நேரடியாக ஊட்டிக்கு மாற்றுப்பாதை!! appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Ooty! ,Ooty ,Utakamandal ,
× RELATED ஊட்டி ஏடிசி பகுதியில் தற்காலிக...