×

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: ஆயிரம் லிங்கங்கள் உள்ள அங்கோரியன் கால தொல்லியல் தளமான ‘கேபால் ஸ்பீன்’, கம்போடியா நாட்டின் சீம் ரீப் (Siem Reap) மாகாணத்தில், இந்தியாவிற்கு வெளியே கட்டப்பட்ட உலகின் பெரிய இந்துக்கோவிலான அங்கோர்வாட்டில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில், குலன்(Kulen) மலைகளின் தென்மேற்கு சரிவுகளில் அமைந்துள்ளது.
காலம்: கெமர் வம்ச அரசர் முதலாம் சூர்யவர்மன் (1006-1050) ஆட்சியில் துவங்கி, இரண்டாம் உதயாதித்யவர்மன் (1050-1066) ஆட்சியில் முடிவடைந்தது.‘‘ஆயிரம் லிங்கங்களின் ஆறு’’ என்று அழைக்கப்படும் ‘கேபால் ஸ்பீன்’ (Kbal Spean) ஆற்றின் குறுக்கே அடர்ந்த காட்டில் சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு ஆற்றின் படுகை / பாறைகளின் மேற்பரப்பின் மீது எண்ணற்ற சிவலிங்கங்கள் புடைப்பு சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. லிங்கங்கள் அமைக்கப்பட்ட தொடர்ச்சியான கற்பாறை சிற்பங்கள் ஆர்வமுள்ளோரைப் பெரிதும் ஈர்க்கின்றன. சிவன், விஷ்ணு, பிரம்மா, லட்சுமி, ராமர், அனுமன் மற்றும் பல்வேறு இந்து புராணக் குருக்கள் அடங்கிய சிற்பங்கள் ஆற்றுபாறைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆற்றின் அடிப்பகுதியில் உள்ள பாறைகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளதால், நீர்வரத்து குறைவாக உள்ள வறண்ட காலங்களில் மட்டுமே அனைத்து சிற்பங்களையும் முழுவதுமாகக் காண முடியும். நாங்கள் சென்ற போது ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் சற்று ஆழமான பகுதிகளில் வடிக்கப்பட்ட சிற்பங்களை முழுமையாகக்காண இயலவில்லை.

9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சில சிற்பங்கள் உள்ளன. ஆனால் இங்குள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில், கெமர் வம்ச அரசர் முதலாம் சூர்யவர்மன் (1006-1050) ஆட்சியில் துவங்கி, இரண்டாம் உதயாதித்யவர்மன் (1050-1066) ஆட்சியில் முடிவடைந்தது. 1059ல் இரண்டாம் உதயாதித்யவர்மன் இங்கு தங்க சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.1969 ஆம் ஆண்டில், பிரான்ஸ் நாட்டு இனவியலாளர் ஜீன் போல்பெட் (Jean Boulbet), ஒரு துறவியால் இந்த கானகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது இந்த ஆற்றுபாறைகளின் மீதுள்ள ஆயிரக்கணக்கான லிங்கங்களைக்கண்டு அதிசயித்து, அறிவித்த பின்னரே வெளியுலகுக்கு தெரிய வந்தது. `கம்போடிய சஹஸ்ரலிங்கம்’ என்றழைக்கப்படும் இவ்விடம், 1970களில் நிகழ்ந்த கம்போடிய உள்நாட்டுப் போரின் காரணமாக, அணுக முடியாததாக இருந்து, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சுற்றுலா செல்ல, பார்வையிட பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டது.படைப்பு ஆற்றலின் சின்னங்களாக விளங்கும் இந்த சிவலிங்கங்களின் மீது பாய்ந்து செல்லும் ஆற்று நீர், நெல் வயல்களை அடைந்து அவற்றை மேலும் வளமாக்கும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.

 

The post சிற்பமும் சிறப்பும் appeared first on Dinakaran.

Tags : Kepal Spain ,Siem Reap province, Cambodia ,Angorwat ,Indus ,India ,Kulen ,
× RELATED புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில்