×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டங்களால் இந்தியாவில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு கூட்டுறவு துறையில் சாதனை

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டங்களால் இந்தியாவில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு கூட்டுறவு துறையில் சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும் வெளியான அறிக்கையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புத் திட்டங்களால் கூட்டுறவுத் துறையில்
13,12,717 பேர்கள் பயன்பெற ரூ.6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி !
15,88,309 மகளிர் பயன்பெற ரூ.2,756 கோடி
சுயஉதவிக் குழு கடன் ரத்து !
46,72,849 விவசாயிகளுக்கு ரூ.35,852 கோடி
பயிர்க் கடன்கள் !
வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்கள்
ரூ.6,892 கோடி வர்த்தகம் !
380 கூட்டுறவு மருந்தகங்களில் 20 சதவீத தள்ளுபடியுடன்
ரூ.457 கோடி மருந்துகள் விற்பனை !
இந்தியாவில் சிறந்து விளங்கும்
தமிழ்நாட்டின் கூட்டுறவுதுறை சாதனைகள் !

நகைக் கடன் தள்ளுபடி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று 31.3.2021-ஆம் நாள் வரை நிலுவையிலிருந்த நகைக் கடன்தொகை ஏறத்தாழ ரூ.6,000 கோடியை தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டார். அந்த ஆணையின்படி 13,12,717 பயனாளிகளுக்கு ரூ.4,818.88 கோடி அளவிற்குத் தள்ளுபடி சான்றிதழுடன் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டது.

மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் 31.3.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,755.99 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 1,17,617 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 15,88,309 மகளிர் பயன்பெற்றனர்.

பயிர்க் கடன்களை உரிய தேதிக்குள் திருப்பிச் செலுத்துவோருக்கு வட்டியில்லாப் பயிர் கடன்
பயிர்க் கடனை உரிய கெடு தேதிக்குள் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்க் கடன்களை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்குகின்றன. இதன்படி 7.5.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளில் 46,72,849 விவசாயிகளுக்கு ரூ.35,852,48 கோடி பயிர்க் கடன்களைகள் வழங்கப்பட்டுள்ளன.

கால்நடை வளர்ப்பு – வட்டியில்லாக் கடன்
2021-22 ஆம் ஆண்டு முதல் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த இதர பணிகளுக்கு பராமரிப்புக் கடன் வழங்குவது உழவர் கடன் அட்டை (KCC) திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் உரிய காலத்தில் கடனைத் திருப்பி செலுத்தும் கால்நடை வளர்ப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் வட்டி ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. 6,52,110 விவசாயிகளுக்குக் கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.3,233.92 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு கடன் உச்சவரம்பு அதிகரிப்பு
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.12 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,25,167 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,265.41 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது.

கைம்பெண்களுக்காக குறைந்த வட்டியில் கடன்
13,003 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.35.35 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்குக் கடன்
மாற்றுத் திறனாளிகளைச் சுயசார்புடையவர்களாக மாற்றவும், நிதி சுதந்திரத்தை வளர்க்கவும், 32,448 பயனாளிகளுக்கு ரூ.151.66 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

பணிபுரியும் – மகளிர் தொழில் முனைவோர்க்குக் கடன்
சமூக நீதியை மேம்படுத்த 11,906 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.331.13 கோடியும், 32,338 மகளிர் தொழில்முனைவோருக்கு ரூ.191.23 கோடியும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல்சேவை மையங்களாக மாற்றப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிலிருந்து வேளாண் உட்கட்டமைப்பு நிதியின்கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நிதியுதவி பெற்று, பல்சேவை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. ரூ.339:27 கோடி மதிப்பிலான 3871 திட்டப்பணிகள் 2082 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் நிறைவேற்றப்பட்டு அவை பல்சேவை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

வேளாண்மை உற்பத்தி- கூட்டுறவு விற்பனை சங்கங்கள்
தமிழகத்தில் செயல்படும் 115 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் ரூ.2,567.38 கோடி அளவிற்கு வேளாண் விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நுகர்வோர் கூட்டுறவுடன் இணைந்த கடன்திட்டத்தில் ரூ.261.83 கோடி அளவிற்கு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களால் முன்னேற்றம் எய்தப்பட்டுள்ளது. வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைசங்கங்கள் ரூ.245.61 கோடி அளவிற்குத் தானிய ஈட்டுக்கடன்களும் ரூ.1,158.25 கோடி அளவிற்கு நகைக்கடன்களும் வழங்கியுள்ளன. மேலும், ரூ.6,892.22 கோடி அளவிற்கு வணிகம் செய்துள்ளன. தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள ஏல கூடத்திற்கு ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் கூரை அமைக்கும் பணிகள் ஜனவரி 2023 இல் முடிவடைந்து, பயன்பாட்டில் உள்ளது. தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்குப் புதிய ஏலக்கூடமும்; அதற்கான அணுகு பாலமும் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு மார்ச் 2022 முதல் பயன்பாட்டில் உள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் அனைத்துத் தயாரிப்புகளையும் விற்பனை செய்வதற்கு ஒரு பொதுவான கைபேசி செயலி {Mobile App) 6.7.2023 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள்
விவசாய உறுப்பினர்களின் நலன் கருதி 2023-24 ஆம் ஆண்டில் 3 புதிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளன.

பெரும் பல நோக்குக் கூட்டுறவு சங்கங்கள்
தமிழகத்தில் செயல்படும் 39 பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ. 418.37 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.28.21 கோடி அளவிற்கு மத்திய காலக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களால் ரூ.186.41 கோடி அளவிற்கு நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.20.90 கோடி அளவிற்குக் கட்டுப்பாட்டுப் பொருட்களும். ரூ.13.54 கோடி அளவிற்கு கட்டுப்பாடற்ற பொருட்களும் பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ரூ.24.88 கோடி அளவிற்கு விவசாய இடுபொருள்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மலைவாழ் – பழங்குடியினர் நலனுக்காக
மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக, 2023-24-ஆம் ஆண்டில் 14 புதிய பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள பழங்குடியின மக்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் திட்டமிடவும். அதிக வருமானம் மற்றும் அதிக வேலை வாய்ப்புகளை உறுதி செய்யவும். சிறு வனப் பொருள்களின் விற்பனையை மேம்படுத்தவும். பெரும்பலநோக்குக் கூட்டுறவு சங்கங்களின் பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், 39 பெரும்பல நோக்குக் கூட்டுறவு சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட மாநில அளவிலான பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் இணையம் துவக்கப்பட்டது. இவ்விணையம் 3.8.2022 அன்று பதிவு செய்யப்பட்டு, 1.11.2022 முதல் செயல்பட்டு வருகிறது.

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்
குறுவை பருவத்தில் டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 2,34,875 விவசாயிகளுக்கு 11,148.41 மெ.டன் யூரியா. 12,387.12 மெடன் டி.ஏ.பி மற்றும் 6,193.56 மெடன் பொட்டாஷ் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஏழைகளுக்கு இலவசத் தொழிற்கல்வி
தருமபுரி மாவட்டம், பர்கூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆகிய இரு இடங்களில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாகத் தொழிற்கல்வி வழங்குவதற்காக 2021-22 ஆம் ஆண்டில் அரசு ரூ.19.05 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது.

கூட்டுறவு கலை – அறிவியல் கல்லூரி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் 2022-23 ஆம் கல்வியாண்டில் ஒரு புதிய கூட்டுறவு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி 2.9.2022 இல் தொடங்கப்பட்டு, 5 பிரிவுகளில் 263 மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.

கூட்டுறவு துறைக்கான பயிற்சிக் கொள்கை
கூட்டுறவு துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக் கொள்கை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரால் 23.8.2023 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு மருந்தகங்கள்
2021-2022-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை விவாதத்தின்போது அறிவிப்பில், ஆண்டுக்கு 60 மருந்தகங்கள் என அடுத்த ஐந்து ஆண்டுகளில் 300 புதிய மருந்தகங்கள் திறக்கப்படும் என்று கூட்டுறவு அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன்படி 16.12.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாநிலம் முழுவதும் ஒரேவிதமான வண்ணம் மற்றும் தனித்துவமான பெயர்ப் பலகைகளுடனான 70 புதிய மாதிரி கூட்டுறவு மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந்த 70 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 31.12.2023 வரை ரூ.24.34 கோடி மதிப்பிலான 380 மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு நிறுவனங்கள், இம்மருந்தகங்களில் 20 விழுக்காடு வரை தள்ளுபடி அளித்து மருந்துகளை விற்பனை செய்வதன் மூலம் ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள் பயனடைகின்றனர்.

2023-24 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் வரை 2166.174 பயனாளர்கள் ரூ.17.82 கோடி அளவிற்குத் தள்ளுபடியின் பயனைப் பெற்றுள்ளனர். கூட்டுறவு மருந்தகங்கள் வழங்கும் தள்ளுபடியால் தனியார் மருந்தகங்களும் தள்ளுபடி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டு, அதனால் பொதுமக்கள் பயன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
2021-22 நிதியாண்டு முதல் 2023-24 நிதியாண்டு டிசம்பர் திங்கள் வரை கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் 380 மருந்தகங்கள் மூலம் ரூ.457.10 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டத்திற்கு உணவுப் பொருள் வழங்கல்
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டம் முதலமைச்சர் அவர்களால் 15.9.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ரவை, சம்பா ரவை மற்றும் சேமியா ஆகியவை கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் மூலமாக காலை உணவு மையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

பனைவெல்லம் விற்பனை
காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தால் கொள்முதல் செய்யப்படும் பனைவெல்லம் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. அக்டோபர் 2021 டிசம்பர் 2023 வரை ரூ.1.5 கோடி மதிப்பிலான பனை வெல்லம் நியாய விலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சிறு தானியங்கள் விற்பனை
உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகளிடமிருந்து (FPOs) கொள்முதல் செய்யப்படும் கேழ்வரகு, கம்பு தினை, குதிரைவாலி சாமை மற்றும் வரகு ஆகிய சிறுதானியங்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் கூட்டுறவுகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாய விலைக் கடைகள் / சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.ஜுன் 2022 முதல் டிசம்பர் 2023 வரை ரூ.87.08 லட்சம் மதிப்பிலான சிறுதானியங்கள் நியாய விலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நியாய விலைக் கடைகளுக்குத் தரச் சான்றிதழ்
நியாயவிலைக்கடைகளில் முழுமையான தர மேலாண்மையை உறுதி செய்வதற்காக கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்கு ISO தரச்சான்றிதழ் பெறப்பட்டு வருகின்றன இதுவரை 9,046 நியாய விலைக் கடைகளுக்கு ISO:9001 சான்றிதழும், 2059 நியாய விலைக் கடைகளுக்கு ISO 28000 சான்றிதழும் பெறப்பட்டுள்ளன.

நியாய விலைக் கடைகளுக்குச் சொந்தக் கட்டடங்கள்
மாநிலம் முழுவதும். மே 2021 முதல் டிசம்பர் 2023 வரை, 206 முழு நேர நியாய விலைக் கடைகள் மற்றும் 109 பகுதி நேர நியாய விலைக் கடைகள் ஆக மொத்தம் 315 நியாய விலைக்கடைகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை – யூபிஐ முறை
ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் UPI முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை, 10,848 நியாய விலைக் கடைகளில் UPI முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல்மழை வெள்ள நிவாரணம்
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.6000/- வீதம் சென்னை, காஞ்சிபுரம். செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 23,18,200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணத் தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.6000/-வீதம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதி கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வட்டங்களில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 6.36,970 குடும்பங்களுக்கும் மற்றும் ரூ.1000/-வீதம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்கள் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 13,34,561 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது.

இப்படி, தமிழநாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு. கூட்டுறவு துறை மூலம் ஏழை எளிய மக்கள் பெரிய அளவில் பயன்பெறும் பல்வேறு திட்டங்களை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.
முதலமைச்சர் அவர்களின் சிறப்பான திட்டங்களால் இந்தியாவில் மிகச்சிறந்த கூட்டுறவுத்துறை எனும் பெருமையும் பாராட்டும் தமிழ்நாட்டின் கூட்டுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டங்களால் இந்தியாவில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு கூட்டுறவு துறையில் சாதனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Tamil Nadu ,India ,Stalin ,Chennai ,MLA K. Stalin ,Dinakaran ,
× RELATED அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்...