×

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் 3 பேருக்கு மூச்சுத்திணறல்!!

புதுச்சேரி: புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் 3 பேருக்கு விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடந்த 11ம் தேதி செவ்வாய் அன்று காலை 7 மணியளவில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர், 4வது தெருவில் உள்ள பொதுமக்கள் அவரவர் வீடுகளில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது மூதாட்டி, மாணவி உட்பட 5க்கும் மேற்பட்டோரை விஷவாயு தாக்கவே, மூச்சுத்திணறி கழிவறைக்குள்ளேயே மயங்கி கிடந்துள்ளனர். அவர்களை மீட்க சென்றவர்களில் சிலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.

தகவலறிந்து உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், ரெட்டியார்பாளையம் போலீசார் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வீடுகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். லேசான மயக்க நிலையில் இருந்தவர்களுக்கு மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது.

இதனிடையே வீடுகளில் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட பிளஸ்1 மாணவி செல்வராணி (15) மற்றும் செந்தாமரை (79), இவரது மகள் காமாட்சி (55) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 பெண்கள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரி கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்த மேலும் 3 பேருக்கு விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் மயக்கமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். புதுநகர் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பாதாள சாக்கடைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றும் நிலையில் அப்பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் 3 பேருக்கு மூச்சுத்திணறல்!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!