×

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை விழா 100% தேர்ச்சி காட்டிய தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

சென்னை: பொதுத்தேர்வில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் 100 சதவீத தேர்ச்சியை காட்டிய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் 79 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.தமிழ்நாட்டில் 7532 மேனிலைப் பள்ளிகள், 5134 உயர்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் பொதுத் தேர்வில் பங்கேற்றனர்.

அதில் பத்தாம் வகுப்பில் 8 லட்சத்து 18 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்வில் 7 லட்சத்து 19 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பத்தாம் வகுப்பு தேர்வில் 4015 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றன. அதில் அரசுப் பள்ளிகள் மட்டும் 1364 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. அதேபோல பிளஸ் 2 தேர்வில் 2478 மேனிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றன. அரசுப் பள்ளிகளில் 397 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

இந்நிலையில், மேற்கண்ட அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை காட்டிய அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பாராட்டும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலைமை ஆசிரியர்களை பாராட்டவும் வாழ்த்து தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா சென்னையில் 14ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது.

அத்துடன், தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும், தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 பள்ளிகளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளையும் முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

The post முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை விழா 100% தேர்ச்சி காட்டிய தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Principal ,Stalin ,K. ,
× RELATED பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு,...