×

குவைத் தீ விபத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பதிவில்,’குவைத்தில் நடந்த பயங்கரமான சோகத்தால் வேதனையடைந்தேன். அங்கு பல இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கல்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய வெளியுறவு அமைச்சகத்தை நாங்கள் மனப்பூர்வமாக வலியுறுத்துகிறோம்’ என்று தெரிவித்து உள்ளார்.ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில்,’குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன். மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் நமது தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்திய அரசு, நமது குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களின் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில்,’ குவைத் தீவிபத்தில் ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மனவேதனை அளிக்கிறது.

இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் வெளியுறவுத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

The post குவைத் தீ விபத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : EU government ,Kuwait fire accident ,Congress ,NEW DELHI ,CONGRESS PARTY ,UNION GOVERNMENT ,KUWAITI ,Mallikarjun Karke ,Kuwait ,Congress' ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்திலிருந்து 978 மாணவர்கள் நாடு திரும்பினர்: ஒன்றிய அரசு தகவல்