×

மக்கள்தான் என் தெய்வம் நான் கடவுள் அல்ல, சாதாரணமான மனிதன்: மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

திருவனந்தபுரம்: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இடங்களில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்றார். இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி நேற்று கேரளா வந்தார். மலப்புரம் மாவட்டம் எடவண்ணா பகுதியில் நடந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட சாலை பேரணியிலும் அவர் கலந்து கொண்டார்.

தொடர்ந்து தொகுதி மக்களிடம் பேசிய ராகுல் காந்தி, “மோடியிடம் பரமாத்மா பேசுவது போல என்னிடம் பேசுவதில்லை. நான் அவரைப் போல கடவுள் அல்ல என்பதுதான் அதற்கு காரணம். நான் சாதாரண மனிதன். மக்கள்தான் என்னுடைய தெய்வம். பிரதமருக்கு என்ன செய்ய வேண்டும் என தெய்வம்தான் சொல்லி தருகிறது. ஆனால் எனக்கு அப்படியல்ல. நான் இயற்கையாக பிறந்தவன் கிடையாது என்று பிரதமர் கூறுகிறார். தான் ஒரு தீர்மானமும் எடுப்பதில்லை என்றும், தன்னை இந்த பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே முடிவுகளை எல்லாம் எடுப்பதாகவும் மோடி கூறினார். ஆனால் அதானி, அம்பானியின் தீர்மானங்களைதான் இந்த விசித்திரமான பரமாத்மா எடுக்கிறார். பரமாத்மா கூறியபடி முதலில் விமான நிலையங்களும், பின்னர் மின் நிலையங்களும் அதானிக்கு தாரை வார்க்கப்பட்டன.

இந்தத் தேர்தலில் அரசியலமைப்புக்கான பெரும் போராட்டம் தான் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு தான் நம் நாட்டின் சரித்திரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கிறது. கேரள மக்களுக்கு பாரம்பரியமான கதகளியை ரசிக்க முடியும். மலையாளத்தில் பேச முடியும். தங்களுக்கு விருப்பமுள்ளதை செய்யலாம். இந்த உரிமைகளை நம் நாட்டின் அரசியலமைப்பு தான் பாதுகாக்கிறது” என்று இவ்வாறு தெரிவித்தார்.

ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி எந்தத் தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்வார் என இதுவரை தெரியவில்லை. இது குறித்து நேற்று வயநாட்டில் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இரு தொகுதி மக்களும் விரும்பும் வகையில் தன்னுடைய முடிவு இருக்கும் என்று மட்டும் ராகுல் காந்தி நேற்று கூறினார். ராஜினாமா செய்யப் போகும் தொகுதி எது என்ற அறிவிப்பை ராகுல் விரைவில் வெளியிடுவார்

The post மக்கள்தான் என் தெய்வம் நான் கடவுள் அல்ல, சாதாரணமான மனிதன்: மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Modi ,Thiruvananthapuram ,Rae ,Bareli ,Wayanad ,Lok Sabha elections ,Kerala ,Malappuram… ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகளைப்...