×

2024 ஜன. முதல் ஏப். வரை 10.14 கோடி சுற்றுலா பயணிகள் வருகை: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டிற்கு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக அலுவலகத்தில் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: கொரோனாவிற்கு பிறகு 2021ம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023ம் ஆண்டில் 11,74,899 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிற்கு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4,97,437 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021ல் 11,53,36,719 ஆக இருந்து 2022ல் 21,85,84,846 ஆகவும், 2023ல் 28,60,11,515 என உயர்ந்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டிற்கு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10,14,94,849 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் செயலாளர் மணிவாசன், சுற்றுலா ஆணையர் சமயமூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

The post 2024 ஜன. முதல் ஏப். வரை 10.14 கோடி சுற்றுலா பயணிகள் வருகை: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,Ramachandran ,Tamil Nadu ,Walaja Road, Chennai ,Dinakaran ,
× RELATED சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தில்...