×

சென்னையில் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுப்பது தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு மேயர் பிரியா தலைமையில் இன்று (12.06.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்ததாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களை வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரமாக சென்னையை உருவாக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை, கால்நடை மருத்துவப்பிரிவு ஆகியவற்றின் சார்பில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி (Anti Rabies Vaccine) மற்றும் அகப்புற ஒட்டுண்ணியை (Endecto Parasiticide) நீக்க அதற்கான மருந்தினை செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய செல்லப்பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும், செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அதிக கவனம் செலுத்தி மற்றவருக்கு தங்களுடைய செல்லப் பிராணிகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அக்கறை கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ள தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம் (Worldwide Veterinary Services (WVS)), தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தொடங்கப்படவுள்ளது. இந்தக் கணக்கெடுப்புப் பணி இன்று (12.06.2024) தொடங்கி 2 மாத காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

The post சென்னையில் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுப்பது தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Mayor Priya ,Chennai ,Metropolitan Chennai Corporation ,Mayor ,Priya ,Dinakaran ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேயர் பிரியா கண்டனம்