×

பெண்களை அவமதிக்கும் பாஜகவின் கலாச்சாரத்தை அமித் ஷாவின் செயல்பாடு பிரதிபலிக்கிறது : கேரள காங்கிரஸ் கண்டனம்

ஹைதராபாத் : ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை அமித் ஷா கண்டித்ததற்கு கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை தரப்புகளுக்கு இடையே மோதல் போக்கு உச்ச கட்டத்தை எட்டி வருகிறது. இந்த மோதல் போக்கை கவனித்து வரும் தமிழக மேலிட பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல், மாநில உயர்மட்ட குழுவினரிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளார். தமிழக பாஜகவில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது? தற்போதைய மோதலின் பின்னணி? வேறு என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன? போன்ற விவரங்களை கேட்டுள்ளனர்.இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா, கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் விமான நிலையம் அருகே இன்று காலை நடைபெற்றது.

ஏற்கனவே தெலங்கானா மாநில கவர்னராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த முக்கிய தலைவர்களுக்கு தமிழிசை வணக்கம் தெரிவித்து சென்றார். அப்போது, மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷாவுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு சென்றார். அப்போது, தமிழிசையை அழைத்த அமித்ஷா, தமிழக பாஜகவில் நடக்கும் கோஷ்டி பூசல் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் கண்டிப்புடன் பேசினார். இந்த வீடியோ நேரடி ஒளிப்பரப்பில் வெளியானது.அண்ணாமலையை டெல்லியில் மூத்த தலைவர்கள் கண்டித்ததால் இனி கட்சி அலுவலகம் தவிர வெளியில் எங்கும் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று அறிவித்திருந்தார். தற்போது தமிழிசையும் கண்டிக்கப்பட்டுள்ளதால் பாஜவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை அமித் ஷா கண்டித்ததற்கு கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்களை அவமதிக்கும் பாஜகவின் கலாச்சாரத்தை அமித் ஷாவின் செயல்பாடு பிரதிபலிக்கிறது என கேரள காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுதான் பெண்களுக்கு எதிரான பாஜகவின் கலாசாரம் மற்றும் நடத்தை. சுயமரியாதை உள்ளவராக இருந்தால், தக்க பதிலடி கொடுத்து கொடுத்துவிட்டு பாஜகவில் இருந்து தமிழிசை விலகி இருக்க வேண்டும். மருத்துவரும், முன்னாள் ஆளுநருமான நீங்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளியிடம் இருந்து இதுபோன்ற அவமதிப்பை சகித்துக் கொள்ளக் கூடாது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெண்களை அவமதிக்கும் பாஜகவின் கலாச்சாரத்தை அமித் ஷாவின் செயல்பாடு பிரதிபலிக்கிறது : கேரள காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Bajakh ,Kerala Congress ,Hyderabad ,Chandrababu Naidu inauguration ,Andhra Pradesh ,Tamil Nadu ,BJP ,
× RELATED ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு...