×

மோடிக்கு வாரணாசி மக்கள் வழங்கியதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெற்றி இது : சு.வெங்கடேசன்

டெல்லி : 18வது மக்களவையில் எங்களின் பணியினை மேலும் சிறப்பாக முன்னெடுக்க தேசத்தின் ஜனநாயகத் திருத்தளமான நாடாளுமன்ற வளாகத்தினுள் நுழைகிறேன் என்று சு. வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “மதுரை மக்களவைத் தேர்தலின் வெற்றிச் சான்றிதழை நாடாளுமன்றத்தில் பதிவு செய்வதற்காக தற்போது நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்திற்கு வந்துள்ளேன்.

1991 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திரு. ஏஜிஎஸ் ராம்பாபு அவர்கள் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மதுரை தொகுதியில் வெற்றி பெற்றார். 33 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படியொரு வெற்றியை மதுரை மக்கள் வழங்கியுள்ளனர்.பிரதமர் மோடிக்கு வாரணாசி மக்கள் வழங்கியதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெற்றி இது. இம்மாபெரும் வெற்றியை வழங்கிய மதுரைத் தொகுதி வாக்காளப் பெருமக்களை வணங்குகிறேன்.

நாடாளுமன்ற வளாகத்தினுள் நுழையும் முன் இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் வந்துள்ள வாசகர் கடிதம் ஒன்றை தோழர்கள் அனுப்பிவைத்தனர். எதிர்கட்சி எம்பி களின் முக்கியத்துவத்தையும், கடந்த ஐந்தாண்டு காலத்தில் நாங்கள் பெற்ற வெற்றிகளின் தொகுப்பு புத்தகமாகவே வெளியிடப்பட்டதை நினைவு கூர்ந்து கல்பாக்கத்திலிருந்து ஆனந்த் என்பவர் எழுதியுள்ள கடிதம் அது.செய்த பணிகள், செய்ய வேண்டிய பணிகளுக்கு உத்வேகம் கொடுத்து முன் அழைத்துச்செல்லும் என்பார்கள். அப்படியொரு நினைவு கூறல் இது. 18வது மக்களவையில் எங்களின் பணியினை மேலும் சிறப்பாக முன்னெடுக்க தேசத்தின் ஜனநாயகத் திருத்தளமான நாடாளுமன்ற வளாகத்தினுள் நுழைகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மோடிக்கு வாரணாசி மக்கள் வழங்கியதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெற்றி இது : சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Tags : Varanasi ,Modi ,S. Venkatesan ,Delhi ,18th ,Lok Sabha ,Venkatesan ,Madurai ,S.Venkatesan ,
× RELATED கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார் : பிரதமர் மோடி