×

வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்து ஜெகன் மோகனை தோற்கடித்துள்ளனர் குழந்தைகளுடன் ஆற்றில் குதிப்பதாக இளைஞர் தற்கொலை மிரட்டல்

*வீடியோ வைரலானதால் பரபரப்பு

திருமலை : வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்து ஜெகன்மோகனை தோற்கடித்துள்ளனர். இதனை விசாரிக்காவிட்டால் குடும்பத்துடன் இளைஞர் ஆற்றில் குதிப்பதாக மிரட்டல் விடுத்த வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூர் பிராமண குடேம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகனின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் கட்சி படுதோல்வி அடைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் இருந்த ராஜு தனது பிள்ளைகளுடன் ராஜமுந்திரி – கொவ்வூரு கம்மன் பாலத்தின் மேலிருந்து கோதாவரி ஆற்றில் குதித்து குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக நேற்று மிரட்டல் விடுத்தார்.

அப்போது வேறு ஒருவரிடம் செல்போனில் வீடியோ எடுக்கும்படி கூறி சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தும் ஜெகன்மோகன் ஏன் தோல்வியடைந்தார் என்பதை விசாரிக்க வேண்டும். மின்னனு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதை குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படாமல் வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தினால் ஜெகனே அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் எனக்கூறிய அவர் போலீசார் வந்தால் ஆற்றில் குதிப்பேன் என்று வீடியோவில் பேசினார். அந்த வீடியோ வைரலாகியது. இந்த வீடியோவை பார்த்த போலீசார் உடனடியாக அங்கு வந்து பார்த்து அவர்களை சமாதானம் செய்து தடுத்து நிறுத்தினர்.

பின்னர் கொவ்வூர் நகர போலீசார் ராஜு குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து கவுன்சிலிங் செய்து பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்துடன் இளைஞர் ஆற்றில் குதிப்பதாக மிரட்டல் விடுத்த வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்து ஜெகன் மோகனை தோற்கடித்துள்ளனர் குழந்தைகளுடன் ஆற்றில் குதிப்பதாக இளைஞர் தற்கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Jegan Mohan ,JEKANMOGAN ,AP State East ,Godavari District ,Kovvur Brahman ,
× RELATED தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு...