×

தகவல் பகிர 772 வாட்ஸ் அப் குழுக்கள் சாராய வியாபாரிகளின் சொத்துகள் முடக்கப்படும்

*திருப்பத்தூர் எஸ்பி கடும் எச்சரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராய வியாபாரிகள் குறித்து தகவல் பகிர 772 வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சாராயம் விற்பவர்களின் சொத்துகள் முடக்கப்படும் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டு நான்காவது எஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆல்பர்ட் ஜான் போதை தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை, புதூர் நாடு, நாயக்கனேரி, வெலிதிகாமணி பெண்டா, மாதகடப்பா உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதியில் இருந்து அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சி அங்கிருந்து கடத்தி வரப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனடிப்படையில், எஸ்பி உத்தரவின் பேரில் அனைத்து தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஓராண்டில் மட்டும் 2700க்கும் மேற்பட்ட சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் போதை தடுப்பு பணிகளை மேற்கொள்ள எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். அதன்பேரில் கிராமப்புற பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அதே போல நிலை தடுமாறி போதைக்கு அடிமையாகி உள்ள இளைஞர்களை மீட்டு அவர்களுக்கு கவுன்சிலிங் எனப்படும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும், போதையால் நிலை தடுமாறி எவ்வாறு குடும்பங்கள் சீரழிகிறது, பெற்றோர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள், போதை பழக்கத்தால் குற்றச்செயல்களுக்கு எப்படி இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள் என்று குறும்படத்தையும் இளைஞர்களுக்கு காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கைப்பந்து போட்டிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த கைப்பந்து போட்டிகள் நடைபெற்று மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தும் அவர்கள் வாழ்வில் நிலை தடுமாறி வேறு வழிக்கு செல்லக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகள் நடத்தப்பட்டு வருவதால் மக்களிடையே காவல்துறை மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டு, வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எஸ்.பி ஆல்பர்ட் ஜான் கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வில்லேஜ் விஜிலென்ஸ் குழு என்ற வாட்சப்பில் 772 குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் பொதுமக்கள் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை, குட்கா, கஞ்சா, உள்ளிட்ட பொருட்கள் குறித்து சம்பந்தப்பட்ட குழு வாட்சாப்பில் தகவல் பகிர்ந்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழுக்களில் போதைக்கு அடிமையாகிய இளைஞர்கள் சீரழிந்தால்அவர்களை நல்வழிப்படுத்தவும் நாங்கள் காவல்துறை சார்பில் அனைத்து கவுன்சிலிங் மற்றும் விழிப்புணர்வுகளும் செய்து வருகிறோம். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் மனம் திருந்தி 19 பேர் நாங்கள் வேறு தொழில் செய்கிறோம் என்று மனு அளித்துள்ளனர்.

அவர்களுக்கு தமிழக அரசின் மூலம் மறுவாழ்வு அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கு மறுவாழ்வும் அளிக்கப்படும். அதேபோல கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் சமூக விரேத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுடைய சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டத்தில் போதை இல்லாத மாவட்டமாக உருவாக்க இளைஞர்களிடையே இது போன்ற விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

The post தகவல் பகிர 772 வாட்ஸ் அப் குழுக்கள் சாராய வியாபாரிகளின் சொத்துகள் முடக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Tirupathur SP ,Tirupathur ,Tirupathur district ,SP ,Albert John ,Tirupattur district… ,Dinakaran ,
× RELATED கல்விக்கு எதிரான மனநிலை பாஜவால்...