×

தொடர் மழையின் காரணமாக பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம்

ஊட்டி : தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் பசுமை திரும்பி உள்ளது. சாலையோரங்களில் மேய்ச்சலில் வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் வரை நல்ல மழைப்பொழிவு இருந்தது. அதன் பின், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உறைப்பனி மற்றும் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தியது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பம் தகித்தது.

இதன் காரணமாக நீர் நிலைகள், தடுப்பணைகள் முழுமையாக வறண்டன. கடுமையான வெயில் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் உள்ள நீர்நிலைகள், குளங்கள், தடுப்பணைகள், ஏரிகளில் நீரின்றி வறண்டது. மேலும் செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து போய் பசுமை இழந்து காட்சியளித்தது. இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடியும், உணவு தேடியும் அலைந்தன.

மேலும், கடுமையான வெயில் காரணமாக காட்டு தீயும் ஏற்பட்டு வந்தது. இதனால், கோடை மழையை எதிர்பார்த்து அனைத்து தரப்பினரும் காத்திருந்தனர்.இதற்கேற்ப கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் கனமழை கொட்டியது. இம்மாதத்திலும் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருப்பதால் வெயில் காரணமாக வறண்டு கிடந்த நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர துவங்கியுள்ளது.

மாயாற்றிலும் நீர் வரத்து துவங்கியுள்ளது. சிறு சிறு நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வருகின்றன. இதன் காரணமாக, வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியடைந்துள்ளது.
இந்த மழையால் செடி கொடிகள் காய்ந்து போய் காட்சியளித்த முதுமலை புலிகள் காப்பக வனங்களும் பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால் சாலையோரங்களில் மான் கூட்டங்கள், மயில்கள், காட்டு யானைகள் உள்ளிட்டவைகள் தென்படுகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

The post தொடர் மழையின் காரணமாக பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம் appeared first on Dinakaran.

Tags : Old Mountain Tigers Archive ,Neelgiri district ,
× RELATED பாடந்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு