×

மாவட்டத்தில் உள்ள 321 முழுநேர ரேசன் கடைகளில் கருவிழி பதிவு செய்து பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகம்

*ஊழியர்களுக்கு இன்று முதல் பயிற்சி

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 321 முழுநேர ரேசன் கடைகளில் கருவிழிப்பதிவு செய்து அதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ரேசன் கடை ஊழியர்களுக்கு இன்று துவங்கி 14ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் 321 முழுநேர ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடைகளில் முழுநேர கணினி மயமாக்கல் மற்றும் முன்னோடியாக செயல்படுத்துதல் திட்டத்தின் கீழ் பரிச்சார்த்த முறையில் ஏற்கனவே 90 முழுநேர ரேசன் கடைகளுக்கு விற்பனை முனைய இயந்திரம் (பிஒஎஸ் இயந்திரம்) மற்றும் ஐஆர்ஐஎஸ் ஸ்கேனர் வழங்கப்பட்டு கணினி மயமாக்கல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. மீதமுள்ள 231 முழுநேர ரேசன் கடைகளுக்கு புதிய விற்பனை முனைய இயந்திரம் மற்றும் ஐஆர்ஐஎஸ் ஸ்கேனர் வரும் 12ம் தேதி வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட 231 முழுநேர ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள் அவர்களிடமுள்ள பழைய விற்பனை முனைய இயந்திரத்தை 12ம் தேதியன்று பிற்பகலில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைப்பார்கள். 13ம் தேதி அன்று பழைய விற்பனை முனைய இயந்திரத்தில் உள்ள தரவுகள் புதிய விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவிறக்கம் செய்யப்பட உள்ளது.
மேலும் 14ம் தேதி அன்று 231 முழுநேர ரேசன் கடைகளின் விற்பனையாளர்களுக்கு புதிய விற்பனை முனைய இயந்திரத்தை இயக்குவது தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது.

எனவே பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு செய்தல் மூலம் வழங்கப்பட்ட நிலையில், இனி கணினி மயமாக்கல் மற்றும் முன்னோடியாக செயல்படுத்துதல் மூலம் கைரேகை பதிவு செய்ய இயலாத குடும்ப அட்டைதாரர்களுக்கு கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இப்பணிகள் நடைபெற உள்ளதால் இன்று 12ம் தேதி பிற்பகல் முதல் 14ம் தேதி வெள்ளிக்கிழமை வரை (நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிகிழமை ரேசன் கடைகளுக்கு வாராந்திர விடுமுறை நாளாகும்) நீலகிரி மாவட்டத்தில் புதிய விற்பனை முனைய இயந்திரம் நடைமுறைக்கு வர உள்ள 231 முழுநேர ரேசன் கடைகள் இயங்காது. இதனால் பொதுமக்கள் அந்த நாட்களை தவிர்த்து இதர நாட்களில் வழக்கம்போல பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 91 முழுநேர ரேசன் கடைகளில் புதிய விற்பனை முனைய இயந்திரம் ஐஆர்ஐஎஸ் ஸ்கேனர் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

மீதமுள்ள 231 ரேசன் கடைகளிலும் இந்த இயந்திரங்கள் வழங்கி இன்று 12ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் கைரேகை பதிவு செய்ய இயலாத குடும்ப அட்டைதாரர்களுடைய கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படும்’’ என்றனர்.

The post மாவட்டத்தில் உள்ள 321 முழுநேர ரேசன் கடைகளில் கருவிழி பதிவு செய்து பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Dinakaran ,
× RELATED பணியிடங்களில் பாலியல் தொல்லை...