×

ரூ.7 கோடி மோசடி வழக்கு: மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை

கேரளா: மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்தில் பிரபல திரைப்படமாக மாறியது மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ். இந்த திரைப்படம் கொடைக்கானல் சார்ந்த படம் என்பதால் தமிழகத்தில் பிரபலமானது. இந்தநிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மோசடி செய்ததாக கூறி துறவூர் பகுதியை சேர்ந்த சிராஜ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவின் அடிப்படையில் தயாரிப்பாளர்கள் ஷோன் ஆண்டனி, சவுபின் ஷாகிர், பாபு ஷாகிர் மீது கொச்சி அருகே உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விவரம், சிராஜ் என்பவரிடம் தயாரிப்பாளர்கள் உங்களை பங்கு தாரராக சேர்க்கின்றோம் என கூறி ரூ.7 கோடி வசூல் செய்துள்ளனர். ரூ.7 கோடி தொகையும், திரைப்படத்தின் பங்கு தொகையும், லாப பங்குதொகையும் தருகிறோம் என சொல்லி அவர்கள் சிராஜிடம் ஏமாற்றி ரூ.7 கோடி வாங்கிவிட்டு, பணத்தையோ, லாபத்தையோ வழங்கவில்லை என குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

அதனடிப்படையில் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தற்போது அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. ஏராளமான பணம் தயாரிப்பாளர்களிடம் வந்த நிலையில் கருப்பு பணமாக மாற்றி மறைத்து வைத்துள்ளனரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷோன் ஆண்டனி என்பவரிடம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இருக்கக்கூடிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களை கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.7 கோடி மோசடி வழக்கு: மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Manjummal Boys ,Kerala ,Tamil Nadu ,Enforcement ,Dinakaran ,
× RELATED மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்துக்கு ஆஸ்கர் விருது