×

சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்ட விமானத்தில் அவசர கால எச்சரிக்கை ஒலி பட்டனை அழுத்திய சிறுவனால் பரபரப்பு: ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

சென்னை, ஜூன் 12: சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட தயாரான, விமானத்தின் அவசரகால கதவு திறப்பதற்கான எச்சரிக்கை மணி பட்டனை சிறுவன் அழுத்தியதால் ஒரு மணி நேரம் விமானம் நிறுத்தப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், புறப்பட தயாரானது. விமானத்தில் 157 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடுவதற்கு தயாரானது. அந்த நேரத்தில் விமானத்தின் அவசரகால கதவு திறக்கப்படுவதாக, எச்சரிக்கை மணி, விமானத்துக்குள், தலைமை விமானி கேபினில் ஒலித்தது. இதனால், பதற்றமடைந்த தலைமை விமானி, அவசரகால கதவை திறப்பது யார், என்று பார்க்க விமான பணிப்பெண்களுக்கு உத்தரவிட்டார்.

அவர்கள் நேரில் சென்று பார்த்தபோது, விமானத்தில் பெற்றோருடன் பயணித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஒருவன், விமானத்தின் அவசர கால கதவை திறப்பதற்காக உள்ள பட்டனை மறைத்து, ஒட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் ஸ்டிக்கரை கிழித்ததும், அப்போது பட்டன் அழுந்தி, அலாரம் ஒலித்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை கண்டித்த விமான பணிப்பெண்கள், தலைமை விமானியிடம் சிறுவன் பற்றி தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, அந்த சிறுவனையும், அவனின் பெற்றோரையும் விமானிகள் எச்சரித்தனர். அப்போது அந்த சிறுவன் முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், தெரியாமல் இப்படி நடந்து விட்டது, மன்னித்து விடுங்கள் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். அதன் பின்பு அந்த சிறுவனை கடுமையாக எச்சரிக்கப்பட்டு, தொடர்ந்து விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், அந்த சிறுவனின் பெற்றோர் மன்னிப்பு கடிதமும் எழுதிக் கொடுத்தனர். அதன் பின்பு அந்த பிளாஸ்டிக் ஸ்டிக்கர் முழுமையாக அகற்றப்பட்டு, அங்கு புதிய பிளாஸ்டிக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் அந்த சிறுவன் அவனது பெற்றோர் ஆகியோருக்கு, அவசரகால வழி வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகள் மாற்றப்பட்டு, வேறு இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இதனால் அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 9.55 மணிக்கு, சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதனால் சென்னை விமான நிலையத்தில் அன்று இரவு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்ட விமானத்தில் அவசர கால எச்சரிக்கை ஒலி பட்டனை அழுத்திய சிறுவனால் பரபரப்பு: ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,-Kolkata ,Kolkata ,IndiGo ,Chennai Domestic Airport ,
× RELATED மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பல...