×

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து

சென்னை: லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதயகுமார் என்பவர், தனது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அதிகாரியை வழக்கில் சேர்க்க மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, அரசு ஊழியருக்கு எதிராக பொய் லஞ்ச வழக்குப்பதிவு செய்திருந்தால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும்.

குற்ற வழக்கின் விசாரணை தாமதப்படுத்தப்படுமானால் அவரது சஸ்பெண்டை நீக்கம் செய்து மீண்டும் பணியில் சேர்க்க சட்டத்தில் இடமுள்ளது. எனவே, குற்ற வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று தெரியவந்தால் அந்த ஊழியரை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். அதற்கு மாறாக உண்மையில் லஞ்சம் பெறும்போது பிடிக்கப்பட்டு தொடரப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டால் அது கேன்சர் செல்லை மீண்டும் உடலில் செலுத்துவதற்கு சமமாகும்.

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க சம்பந்தப்பட்ட ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை, குற்ற வழக்கின் நிலை ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும். சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்குகளில் குற்ற வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடும் வகையில் புலன் விசாரணை அதிகாரியை சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

The post லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,Udayakumar ,Justice ,Bharatha Chakraborty ,Dinakaran ,
× RELATED பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு...