×

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பி.டிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அப்போது தான் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் குறைந்த கட்டணத்தில் சேர முடியும். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு நீட் தேர்வில் நிறைய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அகில இந்திய அளவிலான ரேங்க் பட்டியலில் தமிழக மாணவர்கள் 8 பேர் இடம் பெற்றது இதுவே முதல் முறை.

720க்கு 720 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர். மேலும் 600க்கு மேல் பெற்றவர்கள் 2 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். கடந்த ஆண்டு 1,538 பேர் மட்டும் எடுத்தனர். அரசு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் 650 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். நீட் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று உள்ள நிலையில் புதிய மருத்துவ கல்லூரி அல்லது தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படாததால் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடினமான சுழல் இந்த வருடம் நிலவக்கூடும்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 3 சுயநிதி நிறுவனங்கள் உள்பட 5 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் நிலுவையில் உள்ளன. புதிதாக மருத்துவ இடங்கள் அதிகரிக்காததால் கடந்த வருடம் இருந்த அதே இடங்களுக்கு அதிகளவில் மதிப்பெண் குவித்தவர்கள் எண்ணிக்கை கூடி உள்ளதால் கட்-ஆப் மதிப்பெண் உயருகிறது. இது மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடினமான நிலையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட 9 அரசு மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 150 இடங்களுக்கு பதிலாக 100 இடங்கள் மட்டுமே உள்ளன. கூடுதலாக 400 இடங்கள் கிடைத்து இருந்தால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்து இருக்கும். கூடுதலாக இடங்கள் வந்திருந்தால் கட்-ஆப் மதிப்பெண் குறைந்திருக்கும். அதற்கு இந்த ஆண்டு வாய்பப்பு இல்லை என்று கருதப்படுகிறது. எனவே இந்தாண்டு மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி ஏற்படும் சூழல் உள்ளது.

The post நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி appeared first on Dinakaran.

Tags : NEET ,CHENNAI ,MBBS ,BDS ,Government Medical Colleges ,Private Medical Colleges ,
× RELATED தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்;...