×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கும். வேட்பு மனுதாக்கல் செய்ய ஜூன் 21ம் தேதி கடைசி நாள்.
மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ம் தேதி நடைபெறும்.

மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. இதையடுத்து வேட்பாளர்களை தேர்வு பணியில் அரசியல் கட்சிகள் இறங்கின. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, அதாவது நேற்று தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனையின் போது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் போது வேட்பாளர் யார் என்பது குறித்து இறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், வருகிற 10-07-2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தோழமைக் கட்சிகள் ஆதரவுடன் திமுக வேட்பாளராக, அன்னியூர் சிவா (விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர்) போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். கடந்த 2021 தேர்தலின் போது திமுக எம்எல்ஏ புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்தார். அவரை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்றார். 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக எம்எல்ஏ புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கவுதம் சிகாமணி வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் விடுவிப்பு

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வந்த நா.புகழேந்தி மறைவெய்திய காரணத்தால் கட்சி பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் தெ.கவுதம் சிகாமணி, எம்.எஸ்.(ஆர்த்தோ) விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் ‘‘விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகப் பணியாற்றி வரும் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக டாக்டர் ப.சேகர், பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம் அமைச்சராக உள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.

* மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டியில் கட்சிகள் பெற்ற வாக்கு

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விழுப்புரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவில் போட்டியிட்ட பாக்யராஜ் 65,365 வாக்குகள், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட முரளி சங்கர் 32,198 வாக்குகள், நாம் தமிழர் கட்சியில்
போட்டியிட்ட களஞ்சியம் 8352 வாக்குகள் பெற்றுள்ளனர்.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,DMK ,Anniyur Siva ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,President ,M.K.Stalin ,Aniyur Siva ,Bhujawendi ,MLA ,Vikravandi Assembly Constituency ,Villupuram District ,Vikravandi Constituency ,
× RELATED விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி