×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது: முதலில் வந்த விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம் நேற்றுமுதல் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு முதலில் வந்த விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி 2ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால், உட்கட்டமைப்பு பணிகள் முடியாததால் புதிய முனையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து விமான நிலைய முனையம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. நேற்று காலை 6 மணி முதல் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்திலிருந்து இயங்கியது. காலை 6.40 மணிக்கு முதல் விமானம் சிங்கப்பூரிலிருந்து வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அது தாமதமானதால் வரவில்லை. இதையடுத்து முதல் விமானமாக 6.45 மணிக்கு, சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் வந்திறங்கியது.

புதிய முனையத்துக்கு முதன்முதலாக வந்த அந்த விமானத்துக்கு விமான நிலைய நிர்வாகம் சார்பில் 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்கப்பட்டது. பின்னர் அதில் வந்திறங்கிய பயணிகள் புதிய முனையம் வழியாக வெளியே சென்ற னர். அப்போது பயணிகள் அந்த முனையத்தில் வரையப்பட்டுள்ள பாரம்பரிய ஓவியங்கள் முன் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் வந்திறங்கியது. இங்கிருந்தும் விமானங்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் கூறுகையில், ‘75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனையத்தில் ஆண்டுக்கு 44.50 லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்துக்கு 3,480 பயணிகளை கையாளலாம். இங்கு 104 குடியுரிமை (இமிகிரேசன்) கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

10 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக தற்போது 5 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள 5 ஏரோ பிரிட்ஜ்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். புதிய முனையம் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால் புதிய முனையத்துக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

The post திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது: முதலில் வந்த விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Trichy Airport ,Trichy ,Trichy International Airport ,Dinakaran ,
× RELATED பிறந்த தேதியை மாற்றி மலேசியா செல்ல முயன்ற பயணி கைது..!!