×

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2023 மார்ச் 28ம் தேதி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. 6 வயதான மூத்த மகளை மயிலாப்பூர் நடுக்குப்பத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு அனுப்பினேன். அவளுக்கு ‘குட் டச்…. பேட் டச்…’ குறித்து சொல்லிக்கொடுத்தேன். அப்போது தன்னிடம் கணேஷ் மாமா 2 வாரங்களுக்கு முன்பு பேட் டச் செய்தார் என்றாள். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மயிலாப்பூர் உதவி கமிஷனர் சகாதேவன் உத்தரவின்பேரில், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி விஜித்ரா விசாரித்தார் அதில், விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த 6 வயது சிறுமியை கணேஷ்குமார் (40) பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. தொடர்ந்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் அந்தோணி விஜித்ரா சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராஜலட்சுமி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில், 6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த கணேஷ்குமாருக்கு நீதிபதி ராஜலட்சுமி 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

அபராத தொகை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் புகாரின் மீது சிறப்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்று தந்த இன்ஸ்பெக்டர் அந்தோணி விஜித்ராவுக்கு குழந்தையின் பெற்றோர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

The post 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : POCSO Special Court ,CHENNAI ,Rani ,Tiruvallikeni ,Mylapore ,All ,Women Police Station ,Nadkuppam, Mylapore ,Special POCSO ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அருகே பெண் காவலரை வெட்டிய சம்பவத்தில் கணவன் கைது!!