×

புத்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழமைவு உள்ள நகரங்களின் பட்டியல்: ஆசிய பிராந்தியத்தில் 18வது இடத்தில் சென்னை; ஸ்டார்ட்அப் ஜெனோம் அறிக்கை தகவல்

சென்னை: ஆசிய பிராந்தியத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட்அப்) சூழமைவு உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 18வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஸ்டார்ட்அப் ஜெனோம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சர்வதேச அளவில் புத்தாக்க சூழமைவு மேம்பாட்டு நிறுவனமாக ஸ்டார்ட்அப் ஜெனோம் திகழ்கிறது. இந்நிறுவனம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்படவும், அதன் வளர்ச்சிக்கேற்ற சூழமைவு உருவாக்கத்திற்காகவும் செயல்பட்டு வருகிறது.

வளர்ந்துவரும் சூழமைப்பு கொண்ட நகரங்கள் வரிசையில் சென்னை 21 முதல் 30 இடங்களுக்குள் உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ஜூலை 1, 2021 முதல் டிசம்பர் 31, 2023 வரையான காலத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் சூழமைவு மூலம் 27.4 பில்லியன் டாலரை (சுமார் ரூ.2,27,420 கோடி) உருவாக்கியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூழமைவு மதிப்பு என்பது பொருளாதார தாக்கம் மற்றும் வெளியேறிய ஸ்டார்ட்அப்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகும்.

குறைந்த ஊதியத்தில் திறன்மிகு பணியாளர்கள் கிடைப்பதற்கான சூழமைவு அளவீட்டில் சர்வதேச அளவில் 25 இடங்களுக்குள் ஒன்றாகவும், ஆசிய அளவில் 10 இடங்களுக்குள் ஒன்றாகவும் சென்னை திகழ்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூழமைவு அடிப்படையில் ஸ்டார்ட்அப்களின் செயல்பாடு, வெளியேறிய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களின் மதிப்பு மற்றும் நிதி திரட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. நிதி பெறுவதற்கான சூழமைவில் ஆசிய அளவில் 20 இடங்களுக்குள் சென்னை இடம் பிடித்துள்ளது.

தொடக்க நிலை ஸ்டார்ட்அப்களுக்கான நிதி திரட்டல் மற்றும் முதலீட்டாளர் செயல்பாடு அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. திறன் மிகு பணியாளர் சூழமைவு பிரிவில் சென்னை ஆசிய அளவில் 25 இடங்களுக்குள் உள்ளது. அத்துடன் திறன்மிகு பணியாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கான சூழமைவு இங்கு நிலவுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஸ்டார்ட்அப் டிஎன் நிறுவனத்தின் பிரதான இலக்கு உலக அளவில் ஸ்டார்ட் அப் சூழமைவு உள்ள இடங்களின் வரிசையில் 20க்குள் தமிழ்நாட்டை இடம்பெற செய்வதாகும்.

ஆசிய பிராந்தியத்தில் ஸ்டார்ட் அப்களுக்கு ஏற்ற சூழமைவு உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 18வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்னையில் இதற்குரிய சூழமைவு மிக வேகமாக உருவாகி வருகிறது. தமிழ்நாட்டில் முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இதற்கான சூழமைவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தலைநகரில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் வளர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

பிராந்திய அளவில் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், கடலூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளிலும் மையங்கள் உருவாக்கப்பட்டு வளர்ச்சி பரவலாக்கப்பட்டுள்ளன. இதுதவிர சிறிய அளவிலான அலுவலகங்கள் கோவை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வருகின்றன. பன்னாட்டு அளவில் தடம் பதிக்கும் நோக்கில் துபாயில் புதிதாக புத்தொழில் ஒருங்கிணைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துபாய் சென்று அங்குள்ள வாய்ப்புகளை பெறவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மையத்தில் இதற்கென சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வரும் மாநில முதல்வரின் லட்சியத்தை எட்ட புத்தொழில் துறை வளர்ச்சி ஒரு சாதனை குறியீடாக திகழ்கிறது. புத்தொழில் பதித்துவரும் வெற்றியை தக்கவைக்கும் நோக்கோடு உலகின் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணி புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில் முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் உலக புத்தொழில் மாநாடு வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சமூகத்தில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மிகப்பெரிய அளவில் தொழில் முனைவு சமூகத்தை உருவாக்குவதை இலக்காக கொண்டு ஸ்டார்ட்அப் டிஎன் செயல்படுகிறது. தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள நிதியம் மிகவும் முக்கியமான முன்னெடுப்பாக அமைவதோடு இலக்கை எட்டுவதற்கும் துணை புரிகிறது. இதுவரை 36 ஸ்டார்ட்அப்களில் ரூ.52.20 கோடி பங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியமானது 2022-23ம் நிதி ஆண்டில் தற்போதைய மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பிறகு உருவாக்கப்பட்டதாகும். மாநிலத்தில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. டிபிஐஐடி-யில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 2,300 ஸ்டார்ட்அப்கள் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்டிருந்தன. இப்போது இவற்றின் எண்ணிக்கை 8,500 ஆக உயர்ந்துள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஸ்டார்ட்அப் செயல்பாடுகளில் புதிய சாதனைகளை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் உயர்ந்து வருகிறது. 2022-ம் ஆண்டு ஒன்றிய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா தர வரிசை பட்டியிலில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் அங்கீகாரத்தை தமிழ்நாடு பெற்றது குறிப்பிடத்தக்கது. நிதி ஆயோக் அமைப்பின் கீழ் செயல்படும் அடல் இனோவேஷன் மிஷன் 2023ம் ஆண்டில் ஸ்டார்ட்அப்களுக்கான சூழமைவு, திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை செயல்படுத்துவதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post புத்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழமைவு உள்ள நகரங்களின் பட்டியல்: ஆசிய பிராந்தியத்தில் 18வது இடத்தில் சென்னை; ஸ்டார்ட்அப் ஜெனோம் அறிக்கை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Asian ,Startup Genome ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மகளிர் ஆசியக்கோப்பை டி20 வரலாற்றில்...