×

ஆயுத பூஜைக்கு 3 நாள் தொடர் விடுமுறை சில நிமிடங்களில் முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு

சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி ரயில்களின் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது. இந்த ஆண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11ம் தேதி (வெள்ளிக்கிழமை), விஜயதசமி 12ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக உள்ளதால் 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு, சுற்றுலா தலங்களுக்கு செல்வர்.

இந்நிலையில் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் முன்கூட்டியே முன்பதிவு செய்ய தொடங்கி விடுவார்கள். ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. அதன்படி, அக்டோபர் 9ம் தேதி ஊருக்கு புறப்பட்டுச் செல்வோருக்கான முன்பதிவு நேற்று (11ம் தேதி) தொடங்கியது. அக்டோபர் 10ம் தேதி செல்வோர் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 11ம் தேதிக்கு நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்தது. தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் முன்பதிவு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டினர்.

9ம்தேதி (புதன்) பயணம் செய்ய முன்பதிவுக்கு நேற்று காலை 8 மணிக்கே டிக்கெட் கவுன்டர்கள் முன் வரிசையில் காத்து நின்றனர். சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரும்பூர், அண்ணா நகர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே வரிசையில் நின்றனர். இணைய தளம் வழியாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பெரும்பாலும் டிக்கெட் கவுன்டர்களுக்கு பொதுமக்கள் வருவதில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தவாறே முன்பதிவு செய்துவிடுகின்றனர்.

அதன்படி, நேற்று முன்பதிவு தொடங்கிய ஒருசில நிமிடங்களில் கவுன்டர்களில் நின்ற சிலருக்கு டிக்கெட் கிடைத்தது. சுமார் 7 நிமிடங்களில் தென் மாவட்ட ரயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. ஒரு சில ரயில்களில் ஏ.சி. வகுப்பு மட்டுமே காலியாக உள்ளன. தூத்துக்குடி, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, திருச்செந்தூர் மற்றும் கோவை, திருவனந்தபுரம் பகுதிகளுக்கு செல்லும் வழக்கமான ரயில்கள் அனைத்திலும் 2ம் வகுப்பு படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன.

The post ஆயுத பூஜைக்கு 3 நாள் தொடர் விடுமுறை சில நிமிடங்களில் முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு appeared first on Dinakaran.

Tags : Ayudha Puja ,CHENNAI ,Vijayadashami ,
× RELATED ஆயத பூஜை தொடர் விடுமுறை; ரயில்களில்...