×

சில்லி பாய்ன்ட்…

* ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டன் போட்டி சிட்னியில் நடக்கிறது. நேற்று நடந்த தகுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபிஷேக் யெலிகர், ஷாஸ்வத் தலால் மோதினர். அதில் அபிஷேக் 21-14, 21-5 என்ற நேர் செட்களில் வென்றார். 2வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஜியே யிங் சானை 21-15, 21-14 என நேர் செட்களில் வீழ்த்தினார். இதையடுத்து, இன்று தொடங்கும் முதன்மை சுற்றில் களமிறங்க தகுதி பெற்றுள்ளார். இந்தியா சார்பில் சங்கர் முத்துசாமி, கிரண் ஜார்ஜ், ரகு மரியசாமி, மிதுன் மஞ்சுநாதன், ரவி, சமீர் வர்மா ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடும் சென்னையின் எப்சி அணியில், அடுத்த சீசனுக்கான புதிய வீரர்களை சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக கொலம்பியாவைச் சேர்ந்த முன்கள ஆட்டக்காரர் வில்மர் ஜோர்டன் (33 வயது) ஒராண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை அணி அறிவித்துள்ளது.
* பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆஸம், வேகப் பந்துவீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி இடையே மோதல் வெடித்துள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று பாக். அணி துணை பயிற்சியாளர் அசார் மகமூத் தெரிவித்துள்ளார்.
* இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பெங்கால் அணிக்காக விளையாட உள்ள விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் விரித்திமான் சாஹா, அணியின் வெற்றிக்காக 100 சதவீதத்துக்கும் மேலான பங்களிப்பை அளிக்க உறுதியுடன் உள்ளதாக கூறியுள்ளார்.
* விம்பிளிடன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டென்சுடன் (4வது ரேங்க்) நேற்று மோதிய ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா 6-2, 6-4 என நேர் செட்களில் வென்றார். முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் விம்பிள்டன் தொடர் லண்டனில் ஜூலை 1ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
* உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோற்றது குறித்து கராச்சியில் உள்ள மொபைல் போன் மார்க்கெட்டில் ரசிகர்களிடம் பேட்டி எடுத்த யூடியூபர் சாத் அகமது, பாதுகாப்பு ஊழியர் ஒருவரை அனுமதியின்றி வீடியோ எடுக்க முயற்சித்தபோது அவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் களமிறங்கும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாட ஆப்கான் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒப்பந்தமாகி உள்ளார்.
* பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரை பிப். 19ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற ஐசிசி நிர்வாகிகள் இது தொடர்பான ஏற்பாடுகளை பார்வையிட்டு திருப்தி தெரிவித்ததாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Australia Open Badminton ,Sydney ,Abhishek Yelikar ,Shaswat Dalal ,Abhishek ,Dinakaran ,
× RELATED மைக்ரோசாப்ட் மென்பொருள் முடக்கம்...