×

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள்: 5 பேர் மீது பெண்கள் தொடர்பான வழக்கு

புதுடெல்லி: மோடி அரசில் புதியதாக பதவி ஏற்றுள்ள 28 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் 71 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜூன் 9ம் தேதி பதவி ஏற்றது. இதில் 28 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர்களில் 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வெறுப்பூட்டும் பேச்சு தொடர்பான வழக்குகள் உள்ளதாக தேர்தல் உரிமைகள் தொடர்பான ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது. கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் ஆகியோர் மீது மிகக் கடுமையான கொலை முயற்சி தொடர்பான வழக்கு உள்ளது.

இருவரும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307ன் கீழ் கொலை முயற்சி தொடர்பான வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். அதே போல் 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. அவர்கள் உள்துறை இணை அமைச்சர் பாண்டி சஞ்சய் குமார், தாக்கூர், மஜும்தார், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பழங்குடியினர் விவகார அமைச்சர் ஜுவல் ஓரம் ஆவார்கள். வெறுப்பூட்டும் பேச்சு தொடர்பான வழக்குகளில் 8 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

66% அமைச்சர்கள் 51-70 வயதுக்கு உட்பட்டவர்கள்: மோடி அரசில் 66 சதவீத அமைச்சர்கள் 51 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது மொத்தம் உள்ள 71 பேரில் 47 பேர் 51 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள். 22 அமைச்சர்கள் 51 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். மீதமுள்ள 25 பேர் 61 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள். 24 சதவீத அமைச்சர்கள் 31 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். இந்தக் குழுவில் 17 அமைச்சர்களும், 31-40 வயது வரம்பில் இரண்டு அமைச்சர்களும், 41-50 வயது வரம்பில் 15 அமைச்சர்களும் உள்ளனர். 70 முதல் 80 வயதுக்குட்பட்ட அமைச்சர்களில் 7 பேர் உள்ளனர். இது 10 சதவீதம் ஆகும்.

70 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்: மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 71 பேரில் 70 பேர் கோடீஸ்வரர்கள். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.107.94 கோடி. இதில் 6 அமைச்சர்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர். அவர்கள் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணை அமைச்சரும், தகவல் தொடர்பு அமைச்சகத்தின் இணை அமைச்சருமான டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி ரூ.5705.47 கோடி மதிப்பிலான மொத்த சொத்துக்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரூ. 424.75 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா 2ம் இடம் பிடித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த கனரக தொழில்துறை அமைச்சரும், உருக்கு துறை அமைச்சருமான எச்.டி குமாரசாமியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 217.23 கோடி. அவர் 3ம் இடம் பிடித்துள்ளார். ரயில்வே, ஒலிபரப்புத் துறை, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மொத்தம் ரூ.144.12 கோடி சொத்துக்களுடன் 4ம் இடம் பிடித்துள்ளார். 5ம் இடம் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.121.54 கோடி. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ரூ. 110.95 கோடி சொத்துக்களுடன் 6ம் இடம் பிடித்துள்ளார்.

* 11 அமைச்சர்கள் பிளஸ் 2 பாஸ் 57 பேர் பட்டதாரிகள்
புதிய அமைச்சர்கள் குழுவில் உள்ள 71 அமைச்சர்களில் 11 பேரின் கல்வித் தகுதி 12ம் வகுப்பு ஆகும். ஆனால் 57 அமைச்சர்கள் பட்டதாரி அல்லது அதற்கு மேல் கல்வித் தகுதி உடையவர்கள். இது 80 சதவீதம் ஆகும். குறிப்பாக 14 அமைச்சர்கள் பட்டதாரிகள். மேலும் 10 அமைச்சர்கள் தொழில்முறை பட்டதாரி பட்டம் பெற்றுள்ளனர். இது சட்டம், பொறியியல் அல்லது மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்புக் கல்வியைக் குறிக்கிறது. 26 அமைச்சர்கள் முதுகலை பட்டம் பெற்றுள்ளனர். 7 அமைச்சர்கள் முனைவர் பட்டம் ெபற்றுள்ளனர். இவர்களைத் தவிர டிப்ளமோ பெற்ற மூன்று அமைச்சர்களும் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

The post பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள்: 5 பேர் மீது பெண்கள் தொடர்பான வழக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Modi government ,Dinakaran ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...