×

வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டிருந்தால் மோடி தோற்று போயிருப்பார்: ராகுல் காந்தி விமர்சனம்

ரேபரேலி: உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் மோடி தோற்று போயிருப்பார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ரேபரேலியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு தேர்தலில் தனக்கு மாபெரும் வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “உத்தரபிரதேசத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பாஜ சாதாரண மக்களை புறக்கணித்து விட்டு, தொழிலதிபர்கள், இதர பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதனால் அந்த தொகுதி மக்கள் பாஜவை புறக்கணித்து அவர்களுக்கு பாடம் புகட்டி விட்டனர். தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஆணவத்துக்கு பலியாகாமல், தொடர்ந்து மக்களுக்காக உழைப்பார்கள். வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் மோடி 2 அல்லது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார்” என்று தெரிவித்தார்.

* உபி வெற்றியை நாடு உற்றுநோக்குகிறது: பிரியங்காகாந்தி
ரேபரேலி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பிரியங்காகாந்தி பேசியதாவது: உபியில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி ஒரு வரலாற்று வெற்றியாகும். இந்த வெற்றி செய்தி முழு நாட்டிற்கும் சென்றது என்பதைச் சொல்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். நீங்கள் எங்களிடம் காட்டிய பக்தி மற்றும் விசுவாசத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக, நாங்கள் அனைவரும் உங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகள் மட்டுமல்லாமல் என்றென்றும் பாடுபடுவோம். இந்த முறை தேர்தலுக்கு நான் இங்கு வந்தபோது, தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தூங்கிவிட்டு மீதி நேரம் வேலை செய்யச்சொன்னேன். நீங்கள் அனைவரும் இரவும் பகலும் கடுமையாக உழைத்ததால் ராகுல் இல்லாததை நாங்கள் உணரவில்லை. இந்தத் தேர்தலில் முழுப் பங்களிப்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு தெரிவித்தார்.

* மோடியின் 3.0 அரசில் 20 வாரிசுகள்
மோடியின் 3.0 அரசில் 20 வாரிசுகள் உள்ளதாக ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பதிவில், “பல தலைமுறைகளாக போராட்டம், சேவை, தியாக உணர்வுடன் உள்ள பாரம்பரியத்தை வாரிசு அரசியல் என சொல்லும் மோடியின் 3.0 அரசில் 20 வாரிசுகள் உள்ளனர். இது சொல்களுக்கும், செயல்களுக்கும் உள்ள வித்தியாசம் மோடிதான் என்பதை காட்டுகிறது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அது வருமாறு:
1. எச்.டி.குமாரசாமி – முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன்.
2. ஜெயந்த் சவுத்ரி – முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பேரன்.
3. ராம்நாத் தாக்கூர் – பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் மகன்.
4. ராவ் இந்தர்ஜித் சிங் – அரியானா முன்னாள் முதல்வர் ராவ் பிரேந்திர சிங்கின் மகன்.
5. ரவ்னீத் சிங் பிட்டு – பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன்.
6. ஜோதிராதித்ய சிந்தியா – முன்னாள் ஒன்றிய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியாவின் மகன்.
7. சிராக் பாஸ்வான் – முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன்.
8. ராம் மோகன் நாயுடு – முன்னாள் ஒன்றிய அமைச்சர் யெர்ரன் நாயுடுவின் மகன்.
9. பியூஷ் கோயல் – முன்னாள் ஒன்றிய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன்.
10. தர்மேந்திர பிரதான் – முன்னாள் ஒன்றிய அமைச்சர் தேபேந்திர பிரதானின் மகன்.
11. கிரண் ரிஜிஜு – அருணாச்சல் முன்னாள் சபாநாயகர் ரிஞ்சின் காருவின் மகன்.
12. ஜே.பி. நட்டா – மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் எம்.பி மற்றும் அமைச்சர் ஜெய் பானர்ஜியின் மருமகன்.
13. ஜிதின் பிரசாதா – உத்தரப்பிரதேச முன்னாள் எம்.பி. ஜிதேந்திர பிரசாதா மகன்.
14. கிர்த்தி வர்தன் சிங் – உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் மகாராஜ் ஆனந்த் சிங்கின் மகன்.
15. அனுப்ரியா படேல் – பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அப்னா தளம் நிறுவனர் சோனேலால் படேலின் மகள்.
16. ரக்‌ஷா கட்சே – மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவின் மருமகள்.
17. கமலேஷ் பஸ்வான் – உத்தரப் பிரதேச மக்களவை வேட்பாளர் ஓம் பிரகாஷ் பஸ்வானின் மகன் இவர்.
18. சாந்தனு தாக்கூர் – மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாகூரின் மகன்.
19. வீரேந்திர குமார் காதிக் – மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சர் கவுரிசங்கர் ஷெஜ்வாரின் மைத்துனர்.
20. அன்னபூர்ணா தேவி – பிகார் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் பிரசாத் யாதவின் மனைவி.

The post வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டிருந்தால் மோடி தோற்று போயிருப்பார்: ராகுல் காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Priyanka ,Varanasi ,Modi ,Rahul Gandhi ,Rae Bareli ,Priyanka Gandhi ,Uttar Pradesh ,Congress ,president ,Lok Sabha ,Wayanad ,Raebareli ,Kerala ,Dinakaran ,
× RELATED இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில்...