சென்னை: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சி.கனகராஜ் தாக்கல் செய்த மனுக்களில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்குமாறு உத்தரவிட வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடுமாறு மத்திய அரசுக்கு வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கனகராஜ், தஞ்சையில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது போல சென்னையிலும் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 58 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவை அறிவிப்புகளை தமிழில் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், கடந்த 2021ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதலாக நிதி ஒதுக்ககோரிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பொறுப்பு தலைமை நீதிபதிகள், தமிழ் வளர்ச்சி தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post தமிழில் அறிவிப்பு உள்ளிட்ட வழக்குகள் மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.