×

இனப்பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை ஜூலையில் தெருநாய்கள் கணக்கெடுப்பு: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஜூலை மாதத்தில் தெருநாய்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் உள்ள தெருநாய்கள் குறித்த விபரங்கள், மூன்றாண்டுகள் இடைவெளியில் கணக்கெடுக்கப்பட்டு வந்தன. அப்போது தெருநாய்களை பிடித்து, கருத்தடை மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் தடுப்பூசிகள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டன. கடைசியாக, கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம், தெருநாய்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. அப்போது, 1 லட்சம் தெருநாய்கள் வரை இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவற்றிற்கு கருத்தடை, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அடுத்து, 2021-22ம் காலக்கட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, தெருநாய்கள் கணக்கெடுப்பும், கருத்தடை நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில், கடந்த 2023 நவம்பரில், தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதியில், ரேபிஸ் நோய் பாதித்த தெருநாய் கடித்ததில், 27 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல் பல்வேறு இடங்களில் தெருநாய்கள், மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக சென்னையில் மட்டும், ஆண்டிற்கு ஐந்திற்கும் மேற்பட்டோர், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக, புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதேநேரம், நாய்கள் கடித்து, 100க்கும் மேற்பட்டோர் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகின்றனர். எனவே, தெருநாய்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, 2023ம் ஆண்டு ராயபுரம் மண்டலத்தில் தெருநாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, 3,901 தெருநாய்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருநாய்கள் குறித்த கணக்கெடுப்பை, வரும் ஜூலை மாதத்தில் நடத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கான ஆயத்த பணிகளில், கால்நடை மருத்துவ அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசு சாரா அமைப்பான உலக கால்நடை சேவைகள் அமைப்புடன் இணைந்து இந்த பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளவுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் தெருநாய்கள் தொல்லை குறித்து, பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன. அதன் அடிப்படையில், மாநகராட்சி பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து, இனக்கட்டுப்பாடு செய்யும் பணி, மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. தெருநாய்களை பிடிப்பதற்கு, 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் ஐந்து பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவர் உள்ளனர். நாய்களை பிடிப்பதற்காக, 64 வலைகள் உள்ளன. அத்துடன் கருத்தடை செய்ய, பேசின் பாலம், கண்ணம்மாப்பேட்டை, லாயிட்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில், கால்நடை மருத்துவமனைகள் செயல்படுகின்றன. ஆனாலும், கருத்தடை செய்யப்படாத தெருநாய்கள், ஓராண்டிற்கு இருமுறை கருத்தரிக்கும்.

ஒவ்வொரு முறையும் குறைந்தது, ஏழு குட்டிகள் வரை ஈணுகின்றன. கடந்தாண்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட கணக்கீட்டின்படி, 93,000 தெருநாய்கள் உள்ளன. அதேநேரம் இந்தாண்டுக்குள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியை, பருவமழைக்கு முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக கால்நடை சேவைகள் அமைப்பை சேர்ந்த 50 பேர் 60 நாட்களில் 200 வார்டுகளிலும், 70 வழித்தடங்களில் இருச்சக்கர வாகனங்களில் பயணித்து கேமராக்கள் மூலம் படம் எடுத்து ஆவணப்படுத்த உள்ளனர். மேலும் இந்த அமைப்பு ஆட்கள், வாகனங்களை துரத்தும் நாய்கள், சண்டையிடும் நாய்கள், சரியாக பழகும் நாய்கள் ஆகியவற்றையும் ஆவணப்படுத்துவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post இனப்பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை ஜூலையில் தெருநாய்கள் கணக்கெடுப்பு: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipality ,July ,Chennai Municipal Authorities ,
× RELATED சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா...