×

2வது முறையாக அபார வெற்றி: ராகுல் காந்தி நாளை வயநாடு வருகை.! எம்பி பதவி ராஜினாமா குறித்து அறிவிப்பு?

திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்காக ராகுல் காந்தி நாளை வயநாடு வருகிறார். அப்போது, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வது குறித்த தகவலை அவர் வெளியிடுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பரபரப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார். வயநாட்டில் 3.64 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜாவை தோற்கடித்தார். இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் இதில் ஏதாவது ஒரு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வார இறுதிக்குள் இது தொடர்பான முடிவை நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவிக்க அவர் தீர்மானித்துள்ளார்.

எந்தத் தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப் போகிறார் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. உத்தரபிரதேசத்தில் தற்போது காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் ரேபரேலி தொகுதியை அவர் தக்க வைப்பார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் மேலிடமும் இதையேதான் விரும்புகிறது. இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் திருச்சூரில் தோல்வியடைந்த கருணாகரனின் மகன் கே. முரளீதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி நாளை (12ம் தேதி) கேரளாவுக்கு வருகிறார். மலப்புரத்திலும், வயநாடு மாவட்டம் கல்பெட்டாவிலும் அவர் வாக்காளர்களை சந்திக்கிறார். வாக்காளர்களை சந்திக்க வரும்போது ராகுல் காந்தி என்ன கூறுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியை வரவேற்பதற்காக வயநாடு மற்றும் மலப்புரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தடவையும் ராகுல் காந்திக்கு மகத்தான வெற்றியை கேரள வாக்காளர்கள் பெற்று தருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் தோல்வியடைந்த அவர், வயநாட்டில் 4.31 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

The post 2வது முறையாக அபார வெற்றி: ராகுல் காந்தி நாளை வயநாடு வருகை.! எம்பி பதவி ராஜினாமா குறித்து அறிவிப்பு? appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Wayanad ,Thiruvananthapuram ,India ,Dinakaran ,
× RELATED ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடர்வதா...