×

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுக்கான பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்கியது

*1300க்கும் மாணவர்கள் அழைப்பு

வேலூர் : வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளில் பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் உள்ள 984 இடங்களில் சேர சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் தரவரிசைப்பட்டியல், www.mgacvlr.edu.in எனும் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இருக்கும் மதிப்பெண் அடிப்படையில், குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு, கலந்தாய்வில் பங்கேற்பது குறித்து, கல்லூரியில் இருந்து இமெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக மதிப்பெண் தரவரிசை பட்டியல் அடிப்படையில், என்சிசி, விளையாட்டு, முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள், அந்தமான், நிகோபார் தீவுகளை சேர்ந்த தமிழர்கள் ஆகியோர்களுக்கு கலந்தாய்வில் 36 மாணவர்கள் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இதைதொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு கல்லூரி முதல்வர் மலர் தலைமையில் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று அறிவியல், கலை பாடப்பிரிவுகளான வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டியல் ஆகிய பாடங்களுக்கான முதல் சுற்றுக்கு 400 முதல் 340 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.
இதில் கலந்து கொள்ள 1300 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. நேற்று கலந்து கொண்ட மாணவர்கள், தங்கள் விரும்பமான பாடங்களை தேர்வு செய்தனர்.

தொடர்ந்து, இன்று தமிழ், ஆங்கில மொழிப்பாடப் பிரிவுகளில் தமிழில் 100 முதல் 90 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கும், ஆங்கிலத்தில் 100 முதல் 75 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. நாளை மறுநாள் வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து பாடப்பிரிவுகளில் 340 முதல் 320 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

வரும், 14ம் தேதி தமிழ், ஆங்கில மொழிப்பாடப் பிரிவுகளில் தமிழில் 95 முதல் 93 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கும், ஆங்கிலத்தில் 75 முதல் 60 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. மேலும் மாணவர் சேர்க்கை கட்டணம், கலை மற்றும் வணிக பாடப்பிரிவுக்கு ₹1556, அறிவியல் பாடப் பிரிவுக்கு ₹1586, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு ₹686 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி அதிகரிகள் தெரிவித்தனர்.

ஒரு இடத்திற்கு 17 பேர் போட்டி

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் காலை, மாலை இரு வேலை சேர்த்து 984 இளநிலை பாடப்பிரிவுகள் இடங்கள் உள்ளன. இக்கல்லூரியில் சேருவதற்கு 16 ஆயிரத்து 125 விண்ணப்பித்துள்ளனர். ஒரு இடத்திற்கு 17 மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.

தற்போது, அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ₹1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. மேலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் உயர்கல்வி பயில மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுக்கான பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Government Arts College ,Muthurangam ,Vellore ,Vellore Government Muthurangam College of Arts and Sciences ,Vellore Muthurangam Arts College ,Vellore Muthurangam Government Arts College ,Dinakaran ,
× RELATED 2ம் சுற்று இளநிலை பாடப்பிரிவுக்கான...