×

எத்திலின் வாயு, கால்சியம் கார்பைடு போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களில் முக்கியமானதாக உள்ளது. சுவையுடன் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பதால் பொதுமக்கள் வாழைப்பழத்தை தங்களது அன்றாட உணவு வகைகளில் ஒன்றாக உட்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, வாழைப்பழத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், நாட்டு ரகமான பச்சை, மஞ்சள் வாழைப்பழங்களுடன் மரபியல் மாற்றம் செய்யப்பட்ட பழங்களும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

நன்கு வளர்ந்த வாழை மரத்தில் வாழை குலை நன்றாக காய்த்து, பழுத்து சந்தைக்கு விற்பனைக்கு வந்த நிலைமாறி, வளர்த்தவுடன் அதனை அறுவடை செய்து காய் பதத்தில் இருக்கும்போதே அதை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. காரணம், இயற்கையாக பழுத்த பிறகு, அல்லது பழுக்கும் நிலையில் உள்ளபோது, அந்த வாழைத்தாரை, மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லும்போது, பழங்கள் நசுங்கி, நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதை தவிர்க்க, காய் நிலையில் இருக்கும் வாழைத்தார்கள அறுவடை செய்து, மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது. பின்னர், அவற்றை கிடங்குகிளில் இருப்பு வைக்கப்பட்டு, எத்திலின் என்ற ரசாயனம் தெளித்து, தேவைக்கு ஏற்ப பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வகையான வாழைப்பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ரசாயனங்கள் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்களை நாம் தொடர்ந்து சாப்பிடுவதால், பல்வேறு விதமான ஒவ்வாமைப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். மேலும், பழத்தின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை பாதிக்கிறது. அதாவது வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் சி அளவு குறைவதுடன், பிற நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக் கலவைகளை முற்றிலுமாக மாற்றி விடுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் லாரிகள் மூலமாக டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள பழ மார்க்கெட்டில் எத்திலின் ரசாயனம் மூலம் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. பார்வைக்கு பளிச்சென்று காணப்படும் இவ்வகையான வாழைப்பழங்களை பொதுமக்கள், சில்லரை வியாபாரிகள் நம்பி வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு விற்பனை செய்யப்படும் பழங்களை சாப்பிடும் மக்களுக்கு உடல் உபாதைகள், உடல் நல பாதிப்பு ஏற்படுவதை பற்றி சம்பந்தப்பட்ட பழக்கடை வியாபாரிகள் கவலைப்படுவதே இல்லை.

இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழங்கள், கிடங்குகளில் இருப்பு வைத்துள்ள பழங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்கின்றனர். அதிகாரிகள் வரும் நேரங்களில் நல்ல பழங்களை விற்கும் வியாபாரிகள் பின்னர், வழக்கம்போல் ரசாயனம் கலந்த வாழைப்பழங்கள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

ஒருசில நேரங்களில் திடீர் ஆய்வு செய்யும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செயற்கையாக ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு சில ஆயிரங்கள் அபராதமாக விதிக்கின்றனர். நாளடைவில் மீண்டும் கடையை திறந்து செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழங்களை விற்பனை செய்கின்றனர்.

இதனை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை பழ வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்று விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற வாழைப்பழங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினசரி சாப்பிடுவதால், உடல் நல பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோல் செயற்கை முறையில் வாழைப்பழங்களை பழுக்க வைத்து, விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து, அந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைக்காயை எத்திலின் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து வாழை பழமாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் பழுக்க 3 நாட்களாகும் நிலையில், சில வியாபாரிகள் எத்திலின் ரசாயனம் தெளித்து ஒருமணி நேரத்தில் பச்சை வாழைக்காயை, மஞ்சள் நிறமாக மாற்றி பழுத்த பழம் என்று கூறி, லாப நோக்கில் வாழைக்காய்களை விற்பனை செய்கின்றனர்.

இதுபோன்று ரசாயானம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்களை விற்பனை செய்யும் கடை வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் கடைக்கு நிரந்தரமாக சீல் வைக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த வாழைப்பழம் விற்பனை முழுமையாக தடுக்க முடியும். எனவே, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த வாழைப்பழம் விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது

வாழைப்பழங்கள் இயற்கையாக பழுக்கும் நிகழ்வில் மாவுச்சத்துக்கள் சர்க்கரையாக மாறுகிறது. இதன் விளைவாக வாழைப்பழம் அதிக சுவையுடையதாக மாறும். எத்திலின் வாயு, கால்சியம் கார்பைடு போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாக வாழைப்பழங்களை பழுக்க வைக்கின்றனர். இந்த எத்திலின் வாயுவை செயற்கையாக பழம் பழுக்க வைக்க பயன்படுத்துகின்றனர். கால்சியம் கார்பைடு ஈரப்பதத்துடன் அசிட்டிலீன் வாயுவை வெளியிடும்.

இந்த வாயுவும் எத்திலீனைப் பிரதிபலிப்பதால், வாழைப்பழங்கள் பழுக்கின்றன. வாழைப்பழங்களை செயற்கையாகப் பழுக்க வைக்க அசிட்டிலீன் வாயு பயன்படுத்தும்போது, அதன் சில மிச்சங்கள் வாழைப்பழத்தின் மேற்புறத்தில் தங்கிவிடுகிறது. இது மனிதர்களுக்கு அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் பொருளாகும். இதனால் ஏற்படும் உடல் அபாயங்களால் பல நாடுகளில் அசிட்டிலீன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாயு தலைவலி, குமட்டல், தலைச் சுற்றல் மற்றும் நரம்பு மண்டலத்தில் நீண்டகால பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

The post எத்திலின் வாயு, கால்சியம் கார்பைடு போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய...