×

மாநகராட்சியாக தரம் உயரும் ஊட்டி நகராட்சி

*சுற்று வட்டார பேரூராட்சி, ஊராட்சிகளை இணைத்து விரிவடைகிறது

ஊட்டி : கேத்தி பேரூராட்சி, தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார் மற்றும் உல்லத்தி ஆகிய ஊராட்சிகளை இணைத்து ஊட்டி நகராட்சியை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக அறிவிப்பது தொடர்பாக ஊட்டி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான ஊட்டி நகராட்சி 36 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக கடந்த 20.07.1987 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்நகராட்சியின் மொத்த பரப்பளவு 20.67 சதுர கிமீ ஆகும். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 88 ஆயிரத்து 430 மக்கள் தொகை கொண்ட நகராட்சி.

தென்னிந்தியாவின் மிகவும் முக்கியமான சுற்றுலாத்தலமாக ஊட்டி நகராட்சி விளங்குகிறது. இந்நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆளுநர் மாளிகை, அரசு தாவரவியல் பூங்கா, அரசு ரோஜா பூங்கா, படகு இல்லம், நீலகிரி பழங்குடியினர் அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன. நகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள தொட்டபெட்டா மிகவும் பிரசித்தி பெற்ற மலை சிகரம் ஆகும். கோடை விழா காலங்களில் நாள்தோறும் ஊட்டிக்கு 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரையிலும், இதர நாட்களில் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழ்நாட்டின் பிற சமவெளி பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஊட்டி நகருக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஊட்டி நகரின் முக்கிய தொழிலாக சுற்றுலா, தேயிலை, இங்கிலீஸ் காய்கறிகள் என்றழைக்கப்படும் மலைக்காய்கறிகள் ஆகியவை இருந்து வருகிறது. ஊட்டி நகரில் ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட பழமையான பல முக்கிய கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் வெளிநாட்டு மாணவ, மாணவியர்களும் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். ஊட்டி நகரின் மையப்பகுதியில் ெசல்லக்கூடிய மேட்டுபாளையம்-ஊட்டி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை முக்கிய சாலையாக உள்ளது.

இதனிடையே, ஊட்டி நகராட்சியுடன் அருகில் உள்ள பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளை இணைப்பதன் மூலம் ஊட்டி நகராட்சியின் பரப்பளவு, மக்கள் தொகை மற்றும் வருவாய் அதிகரித்து மாநகராட்சியாக தரம் உயர வாய்ப்பாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வந்தது. ஊட்டி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக ஊட்டி நகராட்சியின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் ரவிக்குமார், ஆணையர் ஏகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக ஆணையாளர் ஏகராஜ் பேசுகையில்,‘‘ஊட்டி நகராட்சி தற்போது 30.67 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இந்நகராட்சியில் 2024ம் ஆண்டு படி சராசரியாக 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ.43.94 கோடி ஆகும். இந்நகராட்சியுடன் 19.20 சதுர கிமீ பரப்பளவுடன் 24 ஆயிரத்து 390 மக்கள் தொகை கொண்ட கேத்தி பேரூராட்சி, 47.66 சகிமீ பரப்பளவுடன் 9440 மக்கள் தொகை கொண்ட தொட்டபெட்டா ஊராட்சி, 34.70 சகிமீ பரப்பளவுடன் 14 ஆயிரத்து 960 பேர் கொண்ட நஞ்சநாடு ஊராட்சி, 36.50 சகிமீ பரப்பளவுடன் 11 ஆயிரத்து 360 பேர் கொண்ட இத்தலார் ஊராட்சி, 43.78 பரப்பளவுடன் கொண்ட 10 ஆயிரத்து 560 மக்கள் தொகை கொண்ட உல்லத்தி ஊராட்சி ஆகியவற்றை இணைப்பதால் மக்களுக்கு அதிக பயன் உள்ள பெரு நகரமாக மேம்பாடு அடையும். இதன்படி மாநகராட்சியாக தரம் உயர்ந்தால் பரப்பளவு 212.51 சதுர கிமீ பரப்பளவு கொண்ட மாநகராட்சியாக மாறுவதுடன், 1 லட்சத்து 93 ஆயிரத்து 710 ஆக மக்கள் தொகை உயரும். ஆண்டு வருமானமும் ரூ.52.14 கோடியாக உயரும்.

ஊட்டி நகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அரசு மேம்பாட்டு திட்டங்கள் அதிக அளவில் ஒதுக்கீடு கிடைக்க பெறும். இணைக்கப்படும் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை அடிப்படை மேம்பாட்டு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

ஊட்டி நகரின் முக்கிய தொழிலான சுற்றுலா, விவசாயம், தேயிலை உற்பத்தி ஆகிய தொழில்கள் மேலும் வளர்ச்சியடைந்து வேலைவாய்ப்புகள் உருவாகும். சுற்றுலா பயணிகளுக்கு உயர்தர வசதிகள், நடைபாதைகள், பார்க்கிங் வசதிகள் போன்றவை மாநகராட்சி தரத்துடன் கிடைக்கும். ஊட்டி நகராட்சியுடன் மேற்குறிப்பிட்ட பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளை இணைப்பதன் மூலம் தரம் உயர்த்த அடைய வேண்டிய மக்கள் தொகை மற்றும் ஆண்டு வருமானம் போதுமானதாக உள்ளது. எனவே ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட உள்ளது’’ என்றார்.

தொடர்ந்து இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் அனைத்து கவுன்சிலர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாநகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து விரைவில் ஊட்டி நகராட்சியயை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மாநகராட்சியாக தரம் உயரும் ஊட்டி நகராட்சி appeared first on Dinakaran.

Tags : Ooty Municipality ,Ooty ,Kethi ,Thottapetta ,Nanjanadu ,Italar ,Ullathi ,Nilgiris… ,Dinakaran ,
× RELATED பராமரிப்பின்றி காட்சியளிக்கும் காந்தல் விளையாட்டு மைதானம்