×

கோடை விடுமுறை முடிந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பள்ளிகள் திறப்பு

*மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

நெல்லை : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளான நேற்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுக்களை கலெக்டர் கார்த்திகேயன் நெல்லை ரெட்டியார்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கினார்.
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. 2024-25ம் கல்வி ஆண்டின் முதல் வேலை நாள் நேற்று ஆரம்பமானது. நீண்ட விடுமுறையில் வெளியூர் சுற்றுப்பயணம், உறவினர் வீடு என இருந்த மாணவ- மாணவிகள் நேற்று காலை உற்சாகமாக பள்ளிகளுக்குச் சென்றனர். பள்ளி வளாகத்தில் நண்பர்களை பார்த்து கோடை விடுமுறையில் தாங்கள் என்ன செய்தோம் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து வகுப்பறைகளுக்குள் ஆர்வமுடன் சென்றனர்.

ஏற்கனவே பள்ளி கட்டிடங்கள், குடிநீர் தொட்டி, மின்சார வடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த தலைமையாசிரியர்களுக்கும், பள்ளி முதல்வர்களுக்கும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பள்ளிகள் மாணவர்களை முதல் நாளில் வரவேற்க தயாராக இருந்தன. நெல்லை மாவட்டத்தில் சில பள்ளிகளில் வகுப்பறைகள் கலர் தாள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புதிய வகுப்பறையில் மாணவ, மாணவிகள் முதல் நாளை உற்சாகமாக ஆரம்பித்தனர்.

பாளையங்கோட்டை, சாராள்தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியைகள் மாணவிகளுக்கு சாக்லேட் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். நெல்லை மாவட்டம் காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சாக்லேட் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கும், பள்ளியை 100% தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் உட்பட பலர் பாராட்டும் நிகழ்வு நடந்தது. இதனால் அரசு பள்ளி களை கட்டியது.

பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவ- மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, பள்ளிகளில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, கேஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தயாராக வைக்கப்பட்டிருந்த பாடப்புத்தகங்கள், நோட்டுக்களை கலெக்டர் கார்த்திகேயன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி, விலையில்லா புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் மாவட்டத்தில் மாணவர்கள் 15 வயது பூர்த்தியடைந்தவர்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க இ-சேவை மையங்களில் பல மணி நேரம் காத்திருந்து அவதிபடுவதைத் தடுக்கவும், ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கும் புதிதாக கைரேகை, கருவிழி பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக நெல்லை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் உள்ளிட்ட 1,533 பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்கள் ‘ஆதார் கிட்’களுடன் 20 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பள்ளி திறந்த முதல் நாளே ஆதார் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த பணியை கலெக்டர் கார்த்திகேயன் ரெட்டியார்பட்டி, கேஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் 17 பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு, புதுப்பிப்பு பணிகள் நடந்தன.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துச்சாமி, அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அலுவலர் சிவராஜ், ‘எமிஸ்’ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. காலை முதலே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு ஆர்வமுடன் சென்றனர்.

கடந்த சில தினங்களாக ஸ்டேஷனரி கடைகளில் நோட்டு, புத்தகம், எழுதுபொருட்களை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது. தென்காசி மாவட்டத்தில் உள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகள், அரசு தொடக்கப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. காலை உணவு திட்டத்தில் கலைஞரின் பிறந்தநாளையொட்டி மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர். தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியைகள் பன்னீர் தெளித்து வரவேற்றனர். தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பூக்கள் மற்றும் சந்தனம் வழங்கி ஆசிரியைகள் வரவேற்றனர்.

3 மாவட்டங்களிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் மாதங்களில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்பதால் பழைய பஸ் பாஸ்களை வைத்தே அரசு பஸ்களில் பயணம் செய்யலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பழைய பஸ் பாஸ்களை காட்டி மாணவ, மாணவிகள் அரசு பஸ்களில் பள்ளிக்கு சென்றனர்.

நெல்லையில் கடும் போக்குவரத்து நெருக்கடி

பள்ளிகள் திறக்கப்பட்டதால் நேற்று காலை 8 மணி முதல் நெல்லை மாநகரப் பகுதியில் பள்ளிக்கு செல்லும் வேன்கள், பஸ்கள், ஆட்டோக்கள் என சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஒரு மாத காலமாக சாலைகளில் சுலபமாக பயணித்த வாகன ஓட்டிகள் நேற்று கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மூட்டை முடிச்சுகளோடு சென்ற மாணவிகள்

நெல்லை பாளையங்கோட்டையில் சாராள்தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய சவேரியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய யோவான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என பல்வேறு பள்ளிகள் விடுதிகளுடன் செயல்படுகின்றன. நெல்லையைச் சேர்ந்த கிராமத்து மாணவ, மாணவிகள் நேற்று தங்களது பெற்றோருடன் விடுதியில் சேர பாய், தலையணை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டிகளை கொண்டு சென்றனர். சாராள்தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விடுதி வசதி உண்டு என்பதால் படுக்கை, தலையணை மற்றும் உடமைகளோடு மாணவிகள் நேற்று பள்ளிக்கு சென்றனர். அவர்களோடு அவர்களது பெற்றோரும் மாணவிகளை விடுதியில் விடுவதற்கு வந்திருந்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் கூட்டம் அலைமோதியது.

The post கோடை விடுமுறை முடிந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Nella, ,Tenkasi ,Tuticorin ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை