×

விபத்தில் இறந்த தந்தையின் இன்சூரன்ஸ் பணத்தை பிரித்து தராததால் தாயை கொன்றேன்

*கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம்

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ராமலிங்கம்மாள் (69). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பால்ராஜ் மற்றும் ஒரு மகன் விபத்தில் இறந்து விட்ட நிலையில், தனியாக வசித்து வந்த ராமலிங்கம்மாள், இருகால்களும் செயலிழந்த நிலையில் இருந்தார். இவரது மூத்த மகன் சக்கரவர்த்தி (45), தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமான நிலையில், மனைவி மற்றும் மகன்கள் பிரிந்து சென்று விட்டனர். இதனால் தாய் ராமலிங்கம்மாளுடன் சக்கரவர்த்தி வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவில், ராமலிங்கம்மாள் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அலறினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ராமலிங்கம்மாள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார், சந்தேகத்தின் பேரில் ராமலிங்கம்மாளின் மகன் சக்கரவர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சக்கரவர்த்தி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:எனது தந்தை மற்றும் சகோதரன் விபத்தில் உயிரிழந்து விட்டனர். அதற்காக இழப்பீடு பணம் எனது தாய்க்கு வந்தது. அந்த பணத்தை எனக்கு பாகம் பிரித்து தருமாறு கேட்டேன். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, மதுபோதையில் வீட்டிற்கு வந்த நான், பணத்தை பிரித்து தருமாறு தாயிடம் தகராறு செய்தேன்.

அவர் பணத்தை தரமுடியாது எனக்கூறியதால், ஆத்திரத்தில் அருகில் கிடந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றேன். பின்னர், போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சக்கரவர்த்தியை கைது செய்த போலீசார், அவரை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

The post விபத்தில் இறந்த தந்தையின் இன்சூரன்ஸ் பணத்தை பிரித்து தராததால் தாயை கொன்றேன் appeared first on Dinakaran.

Tags : Pochampalli ,Balraj ,Mandipatti ,Mathur, Krishnagiri district ,Ramalingammal ,
× RELATED இளம்பெண் மாயம் தொழிலாளி மீது புகார்