- 2026 சட்டமன்றத் தேர்தல்
- திமுக
- விக்கிரவாண்டி
- அஇஅதிமுக
- பிஎம்சி
- விழுப்புரம்
- விழுப்புரம் மாவட்டம்
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- பாஜக
- விக்ரவாண்டி
- பாம்
- தின மலர்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிதான் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனவே திமுக வரலாற்று வெற்றியை பதிவு செய்யவும், அதே வேளையில் தங்களது பலத்தை நிரூபிக்க அதிமுக மற்றும் பாஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவினரும் ஆயத்தமாகி வருகின்றனர். விழுப்புரம் ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டமாக இருந்த போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி 1951ம் ஆண்டு உருவானது.
1957ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின் போது விக்கிரவாண்டி தொகுதி, வளவனூர் சட்டமன்ற தொகுதியாக மாறியது. பின்னர் 1977ல் வளவனூர் தொகுதி மறுசீரமைப்பின் போது கலைக்கப்பட்டு கண்டமங்கலம் தனி தொகுதியாக உருவெடுத்தது. இதனை தொடர்ந்து 2011 தொகுதி சீரமைப்பில் கண்டமங்கலம் தனி தொகுதி கலைக்கப்பட்டு விக்கிரவாண்டி சட்டமன்ற பொது தொகுதியாக 73 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாறியது. முற்றிலும் கிராமப்புறங்களைக் கொண்டுள்ள இந்த தொகுதியில் விவசாயம், அதனை சார்ந்த தொழில்கள் மட்டுமே உள்ளது.
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 53 கிராமங்களும், காணை ஒன்றியத்தில் 46 கிராமங்கள், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8 கிராமங்கள் என 107 வருவாய் கிராமங்கள் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சியை உள்ளடக்கியதாக இருக்கிறது. வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வாக்கு சதவீதம் அதிகமாகவும், சமபலமாகவும், சிறுபான்மையினர், இதர சமூகத்தினர் வாக்குகள் குறைந்தளவு உள்ள தொகுதியாக இருக்கிறது.
கரும்பு விவசாயம் அதிகளவில் இருப்பதால் சர்க்கரை ஆலை மற்றும் 50 அரிசி ஆலைகள் உள்ளன. இந்நிலையில் 73 ஆண்டுகளுக்கு பிறகு 2011 தொகுதி மறு சீரமைப்புக்கு பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராமமூர்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து 2016ல் திமுகவை சேர்ந்த ராதாமணி வெற்றி பெற்ற நிலையில் 2019ல் உடல்நலக்குறைவால் இறந்தார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக வசம் இந்த தொகுதி போனது.
தொடர்ந்து 2021ல் நடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த புகழேந்தி வெற்றி பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு புகழேந்தி இறந்ததால், இந்த தொகுதிக்கு வரும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2026ல் நடக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்ற கையோடு இந்த தொகுதியிலும் வெற்றி முத்திரை பதிக்க காத்துக்கொண்டிருக்கிறது.
இதனிடையே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்த அதிமுகவும், பாஜ கூட்டணியில் உள்ள பாமகவும் களம் காண உள்ளதாகவும், தங்களது வாக்கு சதவீதத்தை பதிவு செய்து கட்சியின் பலத்தை நிரூபிக்க ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
* 13 ஆண்டுகளில் 5வது முறையாக எம்எல்ஏவை தேர்வு செய்யும் மக்கள்
விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2011ல் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தது. அடுத்து 2016ல் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏ ராதாமணி இறந்ததால், 2019ல் இடைத்தேர்தல் நடந்தது. தொடர்ந்து 2021ல் 4வது முறையாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் புகழேந்தி எம்எல்ஏ உடல்நலக்குறைவால் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளில் 5வது முறையாக விக்கிரவாண்டி தொகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய உள்ளனர்.
இதுவரை பதவி வகித்தவர்கள்
1951- கோவிந்தசாமி நாயக்கர் (உழைப்பாளர் கட்சி)
1957- கோவிந்தசாமி நாயக்கர் (திமுக)
1962- கிருஷ்ணன் (காங்கிரஸ்)
1967- ராமன் (திமுக)
1977- கண்ணன் (அதிமுக)
1980- கண்ணன் (அதிமுக)
1984- சுப்பிரமணியன் (அதிமுக)
1989- அழகுவேலு (திமுக)
1991- சுப்பிரமணியன் (அதிமுக)
1996- அழகுவேலு (திமுக)
2001- சுப்பிரமணியன் (அதிமுக)
2006- புஷ்பராஜ் (திமுக)
2011- ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
2016- ராதாமணி (திமுக)
2019- முத்தமிழ்செல்வன் (அதிமுக) இடைத்தேர்தல்
2021- புகழேந்தி (திமுக)
2024- மீண்டும் இடைத்தேர்தல்.
The post 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்க தயாராகும் திமுக: பலத்தை நிரூபிக்க களமிறங்குகிறது அதிமுக, பாமக appeared first on Dinakaran.