×

மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு ரூ.1,39,750 கோடி விடுவிப்பு உ.பிக்கு ரூ.25,069 கோடி தமிழ்நாட்டுக்கு ரூ.5,700 கோடி

புதுடெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு மாநிலங்களுக்கான வரி வருவாய் பறிபோனது. இதனால் 5 ஆண்டுகளுக்கு வழி இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கி வந்தது. இழப்பீடு வழங்கும் நடைமுறையை நீட்டிக்க ஒன்றிய பாஜ அரசு மறுத்து விட்டது. இதுபோல், மாநிலங்களுக்கு உரிமையாக வரவேண்டிய வரிப்பகிர்வை உடனடியாக ஒன்றிய அரசு வழங்காமல் தாமதம் செய்து வருவதாக, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இதனால் மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறையால் தவித்து வருகின்றன. பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசிடம் நிதி கோர வேண்டிய நிலை ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக 2024 – 25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு வரிப்பகிர்வாக ரூ.12,19,783 கோடி வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஒன்றிய பாஜ அரசு தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆதரவுடன் 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஜூன் மாதத்துக்கான வரிப்பகிர்வாக ரூ.1,39,750 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

இதன்படி, அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.25,069.88 கோடியை விடுவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூ.5,700.44 கோடி வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களைப் பொறுத்தவரை மத்திய பிரதேசத்தக்கு ரூ.10,970.44 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.8,828.08 கோடி, பீகாருக்கு ரூ.14,056.12 கோடி, கேரளாவுக்கு ரூ.2,690.20 கோடி, ஆந்திராவுக்கு ரூ.56,55.72 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.2,937.58 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.5,096.72 கோடி, குஜராத்துக்கு ரூ.4,860.56 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு ரூ.1,39,750 கோடி விடுவிப்பு உ.பிக்கு ரூ.25,069 கோடி தமிழ்நாட்டுக்கு ரூ.5,700 கோடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,NEW DELHI ,Union Government ,Union BJP government ,Dinakaran ,
× RELATED காலை 9.15 மணிக்குள் வரவில்லை என்றால்...