×

பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகள் புதிய அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு

புதுடெல்லி: புதிய ஒன்றிய அமைச்சர்கள் இலாகா நேற்று வெளியிடப்பட்டது. இதில் அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகள் பிரதமர் மோடி வசம் வைத்துள்ளார். உள்துறை அமைச்சராக அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் என முக்கிய துறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பாஜ தலைவர் ஜெ.பி.நட்டா, சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த இணை அமைச்சர் எல்.முருகனுக்கு தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 18வது மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்றார். அவருடன் சேர்ந்து 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் என 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்திற்கு தலா 2 அமைச்சர் பதவிகளும், மற்ற 7 கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் தரப்பட்டன. பாஜ சார்பில் 61 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இந்நிலையில், அமைச்சர்களுக்கான இலாகா நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்றிரவு 7.45 மணி அளவில் ஜனாதிபதி மாளிகை மூலம் அறிவிக்கப்பட்டது. இதில் முக்கிய இலாகாக்களில் பெரிய அளவில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை. புதிய அமைச்சரவையில் உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளியுறவு ஆகிய 4 முக்கிய அமைச்சகங்களின் பொறுப்பில் முறையே அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரே நீடிக்கின்றனர். இந்த 4 அமைச்சர்களும் பிரதமரின் தலைமையில் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான அமைச்சரவைக் குழுவில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தவிர இம்முறை புதுமுகங்களான மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறையும், பாஜ தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2014ல் முதல் முறையாக மோடி ஆட்சியில் இதே துறையை நட்டா வகித்தது குறிப்பிடத்தக்கது. நிதித்துறையுடன் கார்ப்பரேட் விவகாரங்கள் துறையை நிர்மலா சீதாராமனும், உள்துறையுடன் கூட்டுறவு துறையை அமித்ஷாவும் தக்க வைத்துக் கொண்டனர்.

நிதின் கட்கரி இம்முறையும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பொறுப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் மின்துறை அமைச்சகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முக்கியமான ரயில்வே மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த அஸ்வினி வைஷ்ணவ், இம்முறையும் இந்த இலாகாக்களை தக்க வைத்துக் கொண்டதோடு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தையும் பெற்றுள்ளார்.

தர்மேந்திர பிரதான் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் முறையே கல்வி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகங்களுக்கு தொடர்ந்து பொறுப்பேற்றுள்ளனர். ஹர்தீப் சிங் பூரி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு பதிலாக நாடாளுமன்ற விவகார அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அர்ஜூன் ராம் மேக்வால் சட்ட அமைச்சராக தொடர்கிறார். அதே போல, சர்பானந்தா சோனோவால் கப்பல் துறையையும், சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பூபேந்தர் யாதவ்வும் தக்கவைத்துள்ளனர்.

கேபினட் அமைச்சர் பதவி பெற்றுள்ள பாஜவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த குமாரசாமிக்கு (மஜத) கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சகமும், ஜிதன் ராம் மஞ்சிக்கு (எச்ஏஎம்) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகமும், லல்லன் சிங்கிற்கு (ஐக்கிய ஜனதா தளம்) பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகமும், தெலுங்கு தேசத்தின் ராம்மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்து அமைச்சகமும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வானுக்கு உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

குஜராத் பாஜ தலைவர் சி.ஆர்.பாட்டீலுக்கு ஜல் சக்தி அமைச்சகம் கிடைத்துள்ளது. பாஜவின் பட்டியல் சமூக முகமான வீரேந்திர குமார் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தை தக்க வைத்துக் கொண்டார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்த கிரிராஜ் சிங் ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா இம்முறை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு மற்றும் தொலைதொடர்பு அமைச்சராக உள்ளார். அமேதியில் ஸ்மிருதி இரானி தோற்றதால் அமைச்சராக முடியாததைத் தொடர்ந்து அவரது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அன்னபூர்ணா தேவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சர்களில், பாஜ கூட்டணியில் உள்ள ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரிக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையும், சிவசேனா தலைவர் பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவுக்கு ஆயுஷ் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த இணை அமைச்சர் எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையும், நாடாளுமன்ற விவகாரத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

* ஏழைகளுக்கு 3 கோடி வீடு அமைச்சரவையில் முடிவு
கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம், இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த 2015-16ம் நிதியாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 4.21 கோடி வீடுகள் கட்ட ஒன்றிய அரசு நிதி உதவி வழங்கி உள்ளது. இதில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.

* 24 மணி நேரம் நீடித்த இழுபறி
கடந்த 2 முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜ இம்முறை கூட்டணி கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைத்துள்ளதால் ஆரம்பத்தில் இருந்தே பெரிதும் தடுமாறி வருகிறது. சந்திரபாபு, நிதிஷ் இருவருமே அதிகமான அமைச்சர் பதவி கேட்டு அடம்பிடித்ததால், அமைச்சர்களை முடிவு செய்வதற்கே பாஜ தட்டுத்தடுமாறியது. இந்த நிலையில், அமைச்சர்களின் இலாகா தேர்வு இன்னும் சிக்கலாக மாறியது. பொதுவாக அமைச்சர்கள் பதவியேற்ற அடுத்த நாள் காலையிலேயே இலாகா பட்டியல் வெளியாகி விடும். ஆனால் இம்முறை அமைச்சர்கள் பொறுப்பேற்று 24 மணி நேரம் ஆகியும் பாஜவால் இலாகாவை அறிவிக்க முடியவில்லை. இறுதியில் நேற்று மாலை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று மாலை மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் தீவிர ஆலோசனைக்குப் பிறகு இரவு 7.45 மணிக்கு அமைச்சர்கள் இலாகா முடிவாகி அறிவிக்கப்பட்டது.

The post பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகள் புதிய அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Union ,Amit Shah ,Home Minister ,Rajnath Singh ,Defense Minister ,Nirmala Sitharaman ,Finance Minister ,Affairs ,Minister ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...